1 சாமுயேல் 14:6-14
6
அப்பொழுது யோனத்தான் தன் ஆயுதம் சுமக்கும் வாலிபனிடம், “விருத்தசேதனம் செய்யாதவர்களின் தடைமுகாமுக்குப் போவோம் வா, ஒருவேளை யெகோவா, நம் சார்பாகச் செயலாற்றுவார். சிலர் மூலமோ, பலர் மூலமோ மீட்க, யெகோவாவிற்கு யாதொன்றும் தடையாயிராது” என்றான்.
7
அதற்கு ஆயுதம் சுமப்போன், “உம்முடைய மனவிருப்பப்படியே செய்யும். முன்செல்லும் நீர் செய்வது எல்லாவற்றிலும் நானும் உம்மோடுகூட மனப்பூர்வமாய் இருப்பேன்” என்றான்.
8
அப்பொழுது யோனத்தான் அவனிடம், “அப்படியானால் வா. நாம் கடந்து அந்த மனிதரை நோக்கிப் போவோம். அவர்கள் நம்மைக் காணட்டும்.
9
அப்பொழுது அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் வரும்வரையும் அங்கேயே நில்லுங்கள்’ என்று சொல்வார்களேயானால் நாங்கள் அவர்களிடம் போகாமல் நின்ற இடத்திலேயே நிற்போம்.
10
ஆனால், ‘எங்களிடம் ஏறி வாருங்கள்’ என்று சொல்வார்களேயானால், நாங்கள் அவர்களிடம் ஏறிப்போவோம். யெகோவா அவர்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு அதுவே நமக்கு அடையாளம்” என்றான்.
11
அப்படியே அவர்கள் இருவரும் தடைமுகாமிலிருந்த பெலிஸ்தியருக்கு தங்களைக் காண்பித்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், “பாருங்கள்! எபிரெயர் தாங்கள் ஒளித்திருந்த கிடங்குகளிலிருந்து தவழ்ந்து வெளியே வருகிறார்கள்” எனத் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர்.
12
அப்பொழுது தடைமுகாமிலிருந்தவர்கள் யோனத்தானையும், அவனுடைய ஆயுதங்கள் சுமப்பவனையும் கூப்பிட்டு, “இங்கே ஏறி வாருங்கள். உங்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்” என்றார்கள். அதைகேட்ட யோனத்தான் ஆயுதம் சுமப்பவனிடம், “யெகோவா அவர்களை இஸ்ரயேலரின் கைகளில் கொடுத்துவிட்டார். என்னைப் பின்தொடர்ந்து ஏறி வா” என்றான்.
13
யோனத்தான் கைகளாலும், கால்களாலும் ஊர்ந்து ஏறினான். அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் அவனுக்குப் பின்னால் ஏறினான். யோனத்தானால் தாக்கப்பட்டு பெலிஸ்தியர் விழுந்தார்கள். அவனைத் தொடர்ந்து வந்த ஆயுதம் சுமப்பவனும் அவர்களை வெட்டிக்கொன்றான்.
14
அந்த முதல் தாக்குதலின்போது யோனத்தானும், ஆயுதம் சுமப்பவனும் அரை ஏக்கர் நிலப்பகுதியில் ஏறக்குறைய இருபதுபேரைக் கொன்றார்கள்.
Settings