1 பேதுரு 3:1-12
1
மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும்.
2
தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும்.
3
உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல.
4
அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது.
5
ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள்.
6
அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள்.
7
கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.
8
இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள்.
9
தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள்.
10
ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும்.
11
அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும்.
12
ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.”
Settings