நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலைக்கு ஓர் எடுத்துக்காட்டு
ரோமர் 7:1-6
1
பிரியமானவர்களே, மோசேயின் சட்டத்தைப் பற்றித் தெரிந்த உங்களுடனேயே நான் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரைக்குமே மோசேயின் சட்டம் அவன்மேல் அதிகாரம் செலுத்துகிறதென்று உங்களுக்குத் தெரியாதா?
2
உதாரணமாக, திருமணமான ஒரு பெண், அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்தால், அவள் அந்தத் திருமணச் சட்டத்திலிருந்து விடுபடுகிறாள்.
3
எனவே, தன் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் ஒரு விபசாரி என்றே சொல்லப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்து விட்டால், அவள் சட்டத்திலிருந்து விடுபடுவாள். அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தாலும் அவள் விபசாரியல்ல.
4
ஆகவே, பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கு மரித்தீர்கள். இப்பொழுது, நீங்கள் மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கே உரியவர்களானீர்கள் இதன்மூலம் நாம் இறைவனுக்குக் கனியை விளைவிக்கிறவர்களாய் இருக்கிறோம்.
5
நம்முடைய மனித இயல்பின்படியே நாம் வாழ்ந்தபொழுது, மோசேயின் சட்டத்தினாலே தூண்டிவிடப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய உடல்களில் செயலாற்றியது. எனவே நம்மிலிருந்து மரணத்திற்கேதுவான கனி பிறப்பிக்கப்பட்டது.
6
ஆனால், நாம் முந்தி நம்மைக் கட்டி வைத்திருந்த மோசேயின் சட்டத்திற்கு மரித்தபடியால், இப்பொழுது அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறோம். ஆகவே எழுதப்பட்ட பழைய முறைமையின்படி அவைகளுக்குக் கீழ்ப்படிவதை விட்டு, ஆவியானவரின் புதிய வழியின்படியே நாம் இறைவனுக்கு ஊழியம் செய்கிறோம்.
Settings