Skip to content
சங்கீதம் 119:18-42

சங்கீதம் 119:18-42

18
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும்.
19
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
20
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
21
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
22
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
23
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
24
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.
25
நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
26
நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
27
உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் தியானிப்பேன்.
28
என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும்.
29
என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30
மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன்.
31
யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும்.
32
நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன்.
33
யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன்.
34
விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன்.
35
உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
36
என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும்.
37
பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
38
உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும்.
39
நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை.
40
நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
41
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக;
42
அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options