மாற்கு 14:43-52
43
இயேசு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும், யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள்.
44
இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு; அவரைக் கைதுசெய்து, காவலுடன் கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான்.
45
யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.
46
அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள்.
47
அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது.
48
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்?
49
ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார்.
50
அப்பொழுது எல்லோரும், இயேசுவைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.
51
இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது,
52
அவன் தன்னுடைய மேலுடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான்.
Settings