Skip to content
லேவியராகமம் 19:17-37

லேவியராகமம் 19:17-37

17
“ ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள்.
18
“ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா.
19
“ ‘நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும். “ ‘வெவ்வேறு வகையான மிருகங்களை ஒன்றோடு ஒன்று புணரவிடவேண்டாம். “ ‘இரண்டு வகையான விதைகளை ஒன்றாய் கலந்து வயலில் விதைக்கவும் வேண்டாம். “ ‘இரண்டு வகையான நூல்களைக்கொண்டு நெய்யப்பட்ட உடைகளை உடுத்தவேண்டாம்.
20
“ ‘மீட்டுக்கொள்ளப்படாமலும், விடுதலை அடையாமலும் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அடிமைப் பெண்ணுடன் வேறு யாராவது உறவுகொண்டால், அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனெனில், அவள் விடுதலை பெற்றிருக்கவில்லை.
21
ஆனாலும் அவன் தான் செய்த குற்றத்திற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவை குற்றநிவாரண காணிக்கையாக யெகோவா முன்னிலையில் சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவர வேண்டும்.
22
ஆசாரியன் அக்குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டு அவன் செய்த பாவத்திற்காக யெகோவா முன்னிலையில், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23
“ ‘நீங்கள் உங்கள் நாட்டிற்குள்போய் கனிகொடுக்கும் மரங்களை நாட்டும்போது, அதன் பழங்களை உண்பதற்கு, முதல் மூன்று வருடங்களும் தடை செய்யப்பட்டவைகளாக எண்ணிக்கொள்ளுங்கள்; அவற்றைச் சாப்பிடக்கூடாது.
24
நான்காம் வருடத்தில் அதன் பழங்கள் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கும். அவை யெகோவாவுக்குத் துதியின் காணிக்கையாகும்.
25
ஆனால் ஐந்தாம் வருடத்தில் உண்டாகும் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். இவ்வாறாக உங்கள் அறுவடை பெருகும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
26
“ ‘எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். “ ‘குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம்.
27
“ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள்.
28
“ ‘இறந்தவர்களுக்காக உங்கள் உடல்களைக் கீறி காயப்படுத்தவேண்டாம். உங்கள் உடல்களில் பச்சை குத்தவும் வேண்டாம். நான் யெகோவா.
29
“ ‘நீங்கள் உங்கள் மகளை வேசியாக்குவதினால், அவளை இழிவுபடுத்தாதீர்கள். மீறினால், நாடு வேசித்தனத்திற்குத் திரும்பி, கொடுமையினால் நிறையும்.
30
“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
31
“ ‘அஞ்சனம் பார்க்கிறவர்களின் பக்கம் போகவேண்டாம். குறிசொல்லுகிறவர்களை தேடவும் வேண்டாம். ஏனெனில், இவற்றால் நீங்கள் அசுத்தமடைவீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
32
“ ‘வயதானவர்களின் முன் எழுந்து நில்லுங்கள். முதியோருக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் இறைவனிடத்தில் பயபக்தியாயிருங்கள். நானே யெகோவா.
33
“ ‘ஒரு பிறநாட்டினன் உங்கள் நாட்டில் உங்களுடன் தங்கியிருந்தால், அவனை ஒடுக்காதீர்கள்.
34
உங்களோடு வாழும் எந்த பிறநாட்டினனும் உங்களுடைய நாட்டினனைப்போல நடத்தப்படவேண்டும். உங்களைப்போல் அவனிலும் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் முன்பு ஒருகாலத்தில் நீங்களும் எகிப்து நாட்டில் பிறநாட்டினராய் இருந்தீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
35
“ ‘நீளம், நிறை, கொள்ளளவு ஆகியவற்றை அளக்கும்போது, நீதியற்ற அளவுகளைப் பயன்படுத்த வேண்டாம்.
36
சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
37
“ ‘ஆகவே நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும், என்னுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா’ ” என்றார்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options