புலம்பல் 1:1-7
1
ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே.
2
இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
3
துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
4
நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
5
அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
6
சீயோன் மகளின் சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத மான்களைப் போலானார்கள்; அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
7
எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
Settings