நியாயாதிபதிகள் 9:32-45
32
எனவே நீயும் உன் மனிதர்களும் இரவுவேளையில் வந்து வயல்வெளிகளில் பதுங்கிக் காத்திருக்கவேண்டும்.
33
காலையில் சூரியன் உதிக்கும் நேரம் பட்டணத்தை நோக்கி முன்னேறுங்கள். காகாலும் அவனுடைய மனிதர்களும் உனக்கெதிராக வெளியே வரும்போது, உன் கையால், செய்ய முடியுமானதை செய்” என்று சொல்லச் சொன்னான்.
34
அவ்வாறே அபிமெலேக்கு அன்றிரவு தனது படைகளுடன் புறப்பட்டுபோய், சீகேமுக்கு அருகில் சென்று நான்கு பிரிவுகளாக நிலைகொண்டு மறைந்திருந்தான்.
35
ஏபேத்தின் மகன் காகால் வெளியே போய் பட்டணத்தின் நுழைவாசலில் வந்து நின்றான்; அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய வீரர்களும் தாங்கள் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளியே வந்தார்கள்.
36
காகால் அவர்களைக் கண்டபோது சேபூலிடம், “அதோ பார், மலையின் உச்சியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான். அதற்கு சேபூல், “நீ மலைகளின் நிழல்களை மனிதன் என்று தவறாக நினைக்கிறாய்” என்றான்.
37
ஆனால் காகால் திரும்பவும், “அதோ பார், நாட்டின் நடுவில் உயர்ந்த பகுதியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள். அதோடு குறிசொல்வோரின் ஒரு பிரிவு கர்வாலி மரப்பாதையிலிருந்து வருகிறது” என்றான்.
38
அப்பொழுது சேபூல் அவனிடம், “இப்பொழுது நீ பெரிய கதை அளந்தாயே, அது எங்கே? அபிமெலேக் யார்? நாம் ஏன் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று நீ இழிவாகப் பேசிய மனிதர்கள் இவர்களல்லவா. புறப்பட்டுப்போய் அவர்களுடன் சண்டையிடு” என்றான்.
39
காகால் சீகேமின் குடிகளுடன் சென்று அபிமெலேக்குடன் சண்டையிட்டான்.
40
அபிமெலேக்கு அவனைத் துரத்தினான்; அநேகர் ஓடிப்போகையில் பட்டணத்தின் வாசல்வரை காயமுற்று விழுந்தார்கள்.
41
அபிமெலேக்கு அருமாவிலே தங்கியிருந்தான். சேபூல், காகாலையும் அவன் சகோதரர்களையும் சீகேமிலிருந்து வெளியே துரத்திவிட்டான்.
42
அடுத்தநாள் சீகேமின் குடிகள் வயல்களுக்குப் போனார்கள். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
43
எனவே அவன் தனது மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வயல்களில் மறைந்திருக்கச் செய்தான். பட்டணத்திலிருந்து மக்கள் வெளியே வருவதை அவன் கண்டதும், அவன் அவர்களைத் தாக்குவதற்கு எழுந்தான்.
44
அபிமெலேக்கும், அவனுடன் இருந்த பிரிவினரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து முன்னேறி பட்டணத்தின் நுழைவாசலுக்குள் விரைந்து சென்றார்கள். மற்ற இரு பிரிவினரும் வயல்களில் இருந்தவர்களின்மேல் பாய்ந்து அவர்களை அடித்து வீழ்த்தினார்கள்.
45
அபிமெலேக்கு அந்த நாள்முழுவதும் பட்டணத்திற்கெதிரான தனது தாக்குதலைக் கடுமையாக்கி அந்தப் பட்டணத்தைப் பிடித்து, அங்குள்ள மக்களைக் கொலைசெய்தான். பின் அப்பட்டணத்தை அழித்து அதிலே உப்புத் தூவினான்.
Settings