நியாயாதிபதிகள் 16:22-31
22
ஆனால் சவரம் செய்தபின் அவனுடைய தலையில் திரும்பவும் மயிர் முளைக்கத் தொடங்கிற்று.
23
பெலிஸ்தியரின் ஆளுநர்கள் தங்களுடைய தெய்வமான தாகோனுக்கு ஒரு பெரிய பலியைச் செலுத்தவும் விழாக்கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள், “எங்கள் தெய்வம் எங்கள் பகைவனான சிம்சோனை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறது” என்று சொல்லிக்கொண்டார்கள்.
24
அந்த மக்கள் சிம்சோனைக் கண்டதும், தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்து சொன்னதாவது: “நமது தெய்வம் எங்கள் பகைவனை நம் கையில் ஒப்படைத்திருக்கிறது; நம்முடைய நாட்டைப் பாழாக்கி, நம்மில் அநேகரை இவன் கொன்றொழித்தானே!”
25
இவ்வாறு அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கும்போது, “எங்களை மகிழ்விக்க சிம்சோனை வெளியே கொண்டுவாருங்கள்” என்று சத்தமிட்டார்கள். எனவே சிம்சோனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவன் அவர்களுக்குச் சாகசங்கள் செய்துகாட்டினான். அவர்கள் அவனைத் தூண்களுக்கிடையே நிறுத்தினார்கள்.
26
அப்பொழுது சிம்சோன் தனது கையைப் பிடித்துநின்ற பணியாளிடம், “கோயிலைத் தாங்கிநிற்கும் தூண்களைத் தடவிப்பார்க்கும்படி அங்கே என்னைக்கொண்டு போ. நான் அவற்றில் சாய்ந்துகொள்ளவேண்டும்” என்றான்.
27
இப்பொழுது பெலிஸ்திய ஆண்களினாலும், பெண்களினாலும் அந்த கோயில் நிறைந்திருந்தது. பெலிஸ்திய ஆளுநர்கள் எல்லோரும் அங்கிருந்தார்கள். மேல்மாடத்தின் மேலும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்களும், பெண்களும் சிம்சோனின் சாகசங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
28
அப்பொழுது சிம்சோன் யெகோவாவிடம், “என்னை ஆட்சிசெய்கிற யெகோவாவாகிய ஆண்டவரே! என்னை நினைவுகூரும்; என் இறைவனே இன்னும் ஒருமுறை மட்டும் என்னைப் பலப்படுத்தும். எனது இரு கண்களையும் எடுத்துப்போட்ட பெலிஸ்தியரை ஒரேயடியில் பழிவாங்கவிடும்” என வேண்டுதல் செய்தான்.
29
பின்பு சிம்சோன் கோவிலைத் தாங்கிநின்ற நடுத்தூண்கள் இரண்டையும் எட்டிப்பிடித்தான். அவற்றில் ஒன்றைத் தனது வலதுகையாலும், மற்றொன்றை தனது இடதுகையாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.
30
பின் சிம்சோன், “நான் சாகும்போது பெலிஸ்தியருடனே சாகவேண்டும்” என்று சொல்லி, தனது முழு பெலனையும் சேர்த்துத் தூண்களைத் தள்ளினான். அப்பொழுது ஆளுநர்கள்மேலும், கூடியிருந்த எல்லா மக்கள்மேலும் கோயில் இடிந்து விழுந்தது. இவ்வாறாக அவன் உயிருடன் இருக்கும்போது கொன்றவர்களைவிட, அவன் இறந்தபோது அநேகரைக் கொன்றான்.
31
அப்பொழுது சிம்சோனின் சகோதரர்களும், அவன் தகப்பனின் முழுக் குடும்பத்தவர்களும் வந்து அவனுடைய உடலை எடுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் அவனை சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள அவனுடைய தகப்பன் மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரயேலுக்கு இருபது வருடங்கள் நீதிபதியாய் இருந்தான்.
Settings