உள்ளடக்கத்திற்குச் செல்க
யோசுவா 8:30-35

ஏபால் மலையில் உடன்படிக்கைப் புதுப்பிப்பு

யோசுவா 8:30-35
30
அதன்பின், யோசுவா ஏபால் மலையில் இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
31
யெகோவாவின் ஊழியனாகிய மோசே மூலமாய் இஸ்ரயேல் மக்களுக்கு அவர் கட்டளையிட்ட, மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே அதைக் கட்டினான். இரும்பு ஆயுதம் பயன்படுத்தாமலும் ஒருபோதும் வெட்டப்படாத முழுக்கற்களைக்கொண்டும் அப்பலிபீடம் கட்டப்பட்டது. அதன்மீது அவர்கள் யெகோவாவுக்கு தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.
32
மோசே எழுதிவைத்திருந்த சட்டங்களை இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் யோசுவா கற்களில் பொறித்தான்.
33
அந்நியரும் இஸ்ரயேலில் பிறந்தவர்களுமான எல்லா இஸ்ரயேலரும், அவர்கள் சபைத்தலைவர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு இருபுறத்திலும் நின்றார்கள். அவர்கள் அதைச் சுமந்த லேவியரான ஆசாரியர்களைப் பார்த்தவாறு நின்றார்கள். மக்களில் பாதிபேர் கெரிசீம் மலைக்கு முன்பாகவும் மற்ற பாதிபேர் ஏபால் மலைக்கு முன்பாகவும் நின்றார்கள். அவர்கள் யெகோவாவின் அடியவனாகிய மோசே இஸ்ரயேல் மக்களை ஆசீர்வதிக்கும்படி, முன்பு அறிவுறுத்தல் கொடுத்தபோது கட்டளையிட்டபடியே நின்றார்கள்.
34
அதன்பின், யோசுவா சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லா வார்த்தைகளையும், எல்லா ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் அவர்களுக்கு வாசித்துக் காட்டினான்.
35
மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும், ஒரு வார்த்தையையாகிலும் யோசுவா வாசிக்காமல் விடவில்லை. அவன் பெண்கள், சிறுபிள்ளைகள், அவர்களில் வாழ்ந்த அந்நியர் உட்பட கூடியிருந்த எல்லா இஸ்ரயேலருக்கும் இவையெல்லாவற்றையும் வாசித்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options