Skip to content
யோசுவா 6:6-20

யோசுவா 6:6-20

6
அப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து, “யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதற்கு முன்னே ஏழு ஆசாரியர்களை எக்காளத்துடன் போகும்படி செய்யுங்கள்” எனச் சொன்னான்.
7
பின்பு மக்களிடம் அவன், “இப்பொழுது நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணிவகுத்து பட்டணத்தைச் சுற்றிவாருங்கள்” என உத்தரவிட்டான்.
8
யோசுவா மக்களிடம் பேசி முடிந்ததும், ஏழு எக்காளங்களைக் கொண்டுசென்ற ஏழு ஆசாரியர்கள், யெகோவாவுக்குமுன் எக்காளங்களை ஊதிக்கொண்டு முன்னால் சென்றனர். அவர்களின் பின்னே யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி சென்றது.
9
எக்காளம் ஊதுகின்ற ஆசாரியர்களின் முன் ஆயுதம் தாங்கிய காவலர் அணிவகுத்துச் சென்றனர். பின்னணியில் உள்ள காவலர் பெட்டிக்கு பின்னே சென்றனர். அவ்வேளையிலெல்லாம் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன.
10
யோசுவா மக்களிடம், “நான் உங்களைச் சத்தமிடச் சொல்லும் நாள்வரை நீங்கள் போர்முழக்கமோ, கூக்குரலோ எழுப்பவேண்டாம். ஒரு வார்த்தையும் பேசவும்வேண்டாம். நான் கட்டளையிட்டதும் கூக்குரல் எழுப்புங்கள்” என சொல்லியிருந்தான்.
11
யெகோவாவின் பெட்டியை ஒருமுறை பட்டணத்தைச் சுற்றிவரச் செய்தான். அதன்பின் மக்கள் முகாமிற்குத் திரும்பிவந்து அவ்விரவைக் கழித்தார்கள்.
12
யோசுவா மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தான். ஆசாரியர்கள் திரும்பவும் யெகோவாவின் பெட்டியைத் தூக்கினார்கள்.
13
ஏழு எக்காளங்களுடன் சென்ற ஏழு ஆசாரியரும் யெகோவாவின் பெட்டிக்கு முன்னே எக்காளங்களை ஊதிக்கொண்டு அணிவகுத்துச் சென்றனர். ஆயுதம் தாங்கியவர்கள் அவர்களுக்கு முன்னே சென்றனர். பின்னணிக்காவலர் யெகோவாவின் பெட்டிக்குப் பின்சென்றனர். அவ்வேளையில் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன.
14
இவ்வாறாக இரண்டாம் நாளும் அவர்கள் பட்டணத்தைச்சுற்றி ஒருமுறை அணிவகுத்துச் சென்றபின் முகாமுக்குத் திரும்பினார்கள். இவ்வாறு ஆறுநாட்கள் செய்தார்கள்.
15
ஏழாம்நாள் பொழுது விடியும் வேளையில், அவர்கள் எழுந்து முன்போலவே பட்டணத்தைச் சுற்றிவந்தனர். ஆனால் அன்றுமட்டும் அவர்கள் ஏழுமுறை பட்டணத்தைச் சுற்றினார்கள்.
16
இப்படியாக ஏழாம்முறை சுற்றிவருகையில் ஆசாரியர்கள் எக்காளத் தொனியை எழுப்பும்போது யோசுவா மக்களிடம், “ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுங்கள்! ஏனெனில் இந்தப் பட்டணத்தை யெகோவா உங்களுக்குத் தந்துவிட்டார்.
17
ஆனாலும் இப்பட்டணமும் அதிலுள்ள யாவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியவையாகும். நீங்கள் ராகாப் என்னும் வேசியையும், அவளுடன் வீட்டிலிருப்பவர்களையும் மாத்திரம் தப்பவிட்டு விடுங்கள். ஏனெனில் நாம் அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள்.
18
ஆனாலும் யெகோவாவுக்கென்று ஒதுக்கப்பட்ட எதையும் நீங்கள் தொடாதிருங்கள். அப்படி எதையாவது எடுப்பதினால் உங்கள்மீது அழிவைக் கொண்டுவராதீர்கள். இல்லையெனில் இஸ்ரயேலின் முகாமை அழிவுக்குட்படுத்தி அதன்மேல் துன்பத்தைக்கொண்டுவருவீர்கள்.
19
எல்லா வெள்ளியும், தங்கமும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களும் யெகோவாவுக்கென ஒதுக்கப்பட்டவை. அவை யெகோவாவின் களஞ்சியத்தில் சேர்க்கப்படவேண்டும்” எனக் கட்டளையிட்டான்.
20
எக்காளங்கள் தொனித்தபோது மக்கள் சத்தமிட்டனர், எக்காளத் தொனியுடன் மக்கள் பெரும் சத்தமிடும்போது, பட்டணத்தின் சுற்றுமதில்கள் இடிந்து விழுந்தன. அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்கு நேராக உள்ளே ஏறி பட்டணத்தைக் கைப்பற்றினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options