யோசுவா 24:16-28
16
அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
17
எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார்.
18
அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள்.
19
அதற்கு யோசுவா மக்களிடம், “நீங்கள் உங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்ய இயலாதிருக்கிறீர்கள். அவர் பரிசுத்தமான இறைவன். அவர் வைராக்கியமுள்ள இறைவன். நீங்கள் அவருக்கு எதிராக செய்யும் கலகத்தையும், பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.
20
அவர் உங்களுக்கு நல்லவராயிருந்த பின்பும், நீங்கள் யெகோவாவைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தால், அவரும் உங்களைவிட்டு விலகிச்சென்று, உங்கள்மேல் பெருந்துன்பத்தை வரப்பண்ணி உங்களை முடிவுறப் பண்ணுவார்” என்றான்.
21
அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “இல்லை! நாங்கள் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்றார்கள்.
22
அதற்கு யோசுவா, “நீங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்வதைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள்” என்றான். அதற்கு மக்களும், “ஆம், நாங்களே சாட்சிகள்,” என்றார்கள்.
23
“அப்படியானால், இப்பொழுதே உங்கள் மத்தியிலுள்ள அந்நிய தெய்வங்களை எறிந்துவிட்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் உள்ளங்களை ஒப்புக்கொடுங்கள்” என்று யோசுவா சொன்னான்.
24
அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்து அவருக்குக் கீழ்படிவோம்” என்றார்கள்.
25
அந்நாளில் யோசுவா சீகேமிலே மக்களுக்காக ஒரு உடன்படிக்கையைச் செய்து அவர்களுக்குச் சட்டங்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்தினான்.
26
இவற்றை யோசுவா இறைவனின் சட்ட புத்தகத்தில் எழுதிவைத்தான். பின்பு யெகோவாவின் பரிசுத்த இடத்திற்கு அருகேயுள்ள கருவாலி மரத்தின்கீழ் ஒரு பெரிய கல்லை நிறுத்தினான்.
27
அப்பொழுது அவன் எல்லா மக்களிடமும் கூறியதாவது: “இதோ பாருங்கள்; இந்தக் கல் நமக்கெதிரான சாட்சியாயிருக்கும். யெகோவா நமக்கு கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் இறைவனுக்கு உண்மையாயிராவிட்டால், இக்கல்லே உங்களுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும்” என்றான்.
28
அதன்பின் யோசுவா இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் சொத்துரிமை இடங்களுக்குப் போவதற்கு அனுப்பிவைத்தான்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings