எரேமியா 18:18-23
18
அதற்கு அவர்கள், “எரேமியாவுக்கு எதிராகச் சதித்திட்டம் போடுவோம் வாருங்கள்; ஏனெனில் ஆசாரியர்கள் சட்டத்தைக் போதிப்பதும், ஞானிகள் ஆலோசனை கொடுப்பதும், இறைவாக்கு உரைப்போர் இறைவாக்கு உரைப்பதும் இல்லாமல் போகாது. எனவே வாருங்கள். நமது வார்த்தையினால் அவனைத் தாக்கி அவன் சொல்லும் எதையும் கவனியாமல் இருப்போம்” என்றார்கள்.
19
“யெகோவாவே! எனக்குச் செவிகொடும். என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் சொல்வதையும் கேளும்.
20
நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யப்படலாமோ? அவர்கள் எனக்குக் குழியை வெட்டியிருக்கிறார்களே! நான் உமது முன்னிலையில் நின்று உமது கடுங்கோபத்தை அவர்களிடமிருந்து திருப்பும்படி அவர்களின் சார்பாகப் பேசியதை நினைத்தருளும்.
21
ஆகையால் அவர்கள் பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, வாளின் வல்லமைக்கு அவர்களை ஒப்புக்கொடும். அவர்களுடைய மனைவிகள் பிள்ளையற்றவர்களாகவும், விதவைகளாகவும் ஆகட்டும். அவர்களுடைய ஆண்கள் சாகடிக்கப்பட்டு, அவர்களின் வாலிபர் யுத்தத்தில் வாளால் கொலைசெய்யப்படட்டும்.
22
நீர் திடீரென அவர்கள்மீது கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டுவரும்போது, அவர்கள் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கட்டும். ஏனெனில் என்னைப் பிடிப்பதற்கு அவர்கள் குழிவெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
23
ஆனாலும் யெகோவாவே! எனக்கெதிராக என்னைக் கொல்வதற்கு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர். அவர்களுடைய குற்றங்களை மன்னியாமலும், உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றாமலும் இரும். அவர்கள் உமக்கு முன்பாக வீழ்த்தப்படட்டும்; உமது கோபத்தின் வேளையில் இவ்வாறு அவர்களுக்குச் செய்யும்.”
Settings