உள்ளடக்கத்திற்குச் செல்க
ஏசாயா 60:15-22

நித்திய மாற்றமும் தெய்வீக ஒளியும்

ஏசாயா 60:15-22
15
“ஒருவரும் உன் வழியே நடவாமல் நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன்.
16
நீ நாடுகளின் பாலைக் குடித்து, அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய். அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய்.
17
வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன். மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன். சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும் நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன்.
18
உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது; உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது. ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும், உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய்.
19
இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது; அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது. ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்; உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார்.
20
உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை. யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார், உன் துக்க நாட்களும் முடிவடையும்.
21
அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து, நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்; அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக என் கரங்களின் வேலையாகவும் நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள்.
22
உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், அற்பரும் வலிய நாடாவர். நானே யெகோவா; அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options