Skip to content
ஏசாயா 59:1-15

ஏசாயா 59:1-15

1
நிச்சயமாகவே, காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை; கேட்க முடியாதபடி அவருடைய காது மந்தமாகவுமில்லை.
2
ஆனால், உங்களுடைய பாவங்களே, உங்கள் இறைவனிடமிருந்து உங்களைப் பிரித்திருக்கின்றன. உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதபடி, அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்திருக்கின்றன.
3
ஏனெனில் உங்கள் கைகள் இரத்தத்தினாலும், உங்கள் விரல்கள் குற்றத்தினாலும் கறைபட்டிருக்கின்றன; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசி, உங்கள் நாவுகள் கொடுமையானவற்றை முணுமுணுத்திருக்கின்றன.
4
ஒருவனும் நீதிக்காக வாதாடுவதில்லை; ஒருவனும் உத்தமமாய் தன் வழக்கைப் பேசுவதில்லை. அவர்கள் அர்த்தமற்ற விவாதத்தில் நம்பிக்கை வைத்து, பொய் பேசி, தீங்கைக் கருத்தரித்து பாவத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
5
அவர்கள் விரியன் பாம்பின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தி வலையைப் பின்னுகிறார்கள். அவைகளின் முட்டையை உண்பவன் எவனும் சாவான்; அவைகளில் ஒன்று உடைந்தால் விரியன் பாம்பு வெளிவரும்.
6
அவர்களின் சிலந்தி வலைப் பின்னல்கள், உடைக்கு உபயோகமற்றவை; அவர்கள் செய்தவற்றால் தங்களை மூடிக்கொள்ளவும் இயலாது. அவர்களுடைய செயல்களெல்லாம் தீமையானவையே; அவர்களின் கைகளில் வன்செயல்களே இருக்கின்றன.
7
அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன; குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அவர்கள் விரைகிறார்கள். அவர்கள் சிந்தனைகளும் தீமையான சிந்தனையே; பாழாக்குதலும் அழிவும் அவர்களின் வழித்தடங்களில் இருக்கின்றன.
8
சாமாதானத்தின் வழியை அவர்கள் அறியமாட்டார்கள்; அவர்களின் பாதைகளில் நீதி இல்லை. அவர்கள் தங்கள் பாதைகளைக் கோணலாக்கிக் கொண்டார்கள்; அதில் நடப்பவர் எவருக்கும் சமாதானம் இல்லை.
9
ஆகையால் நியாயம் எங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது, நீதி எங்களை நெருங்குவதில்லை; வெளிச்சத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் எல்லாமே இருளாயிருக்கின்றன. பிரகாசத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனாலும் காரிருளிலேயே நடக்கிறோம்.
10
நாங்கள் குருடர்களைப்போல் சுவரைப் பிடித்து, தடவித் திரிகிறோம்; கண்கள் இல்லாதவர்களைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகிறோம். மங்கிய மாலைப் பொழுதில் இடறுகிறதுபோல நடுப்பகலில் இடறுகிறோம்; பெலனுள்ளவர்கள் மத்தியில் மரித்தவரைப்போல் இருக்கிறோம்.
11
நாங்கள் யாவரும் கரடிகளைப்போல் உறுமுகிறோம்; புறாக்களைப்போல் கவலையுடன் விம்முகிறோம். நியாயத்திற்குக் காத்திருந்தோம், ஆனால் அதைக் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அதுவும் தூரத்திலேயே இருக்கிறது.
12
எங்கள் மீறுதல்கள் உமது பார்வையில் அநேகமாய் இருக்கின்றன, எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராகச் சாட்சி பகிருகின்றன. எங்கள் மீறுதல்கள் எப்போதும் எங்களுடனேயே இருக்கின்றன; எங்கள் அநியாயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
13
யெகோவாவுக்கு விரோதமாகக் கலகமும் நம்பிக்கைத் துரோகமும் செய்தோம்; எங்கள் இறைவனுக்கு முதுகைக் காட்டினோம். ஒடுக்குதலையும் கிளர்ச்சியையும் குறித்துப்பேசி, எங்கள் இருதயங்களில் கருத்தரித்த பெரும் பொய்களை வெளிப்படுத்தினோம்.
14
அதனால், நியாயம் பின்னே தள்ளப்பட்டிருக்கிறது; நீதி தூரத்திலே நிற்கிறது; உண்மை தெருக்களில் இடறி, உத்தமம் உள்ளே வரமுடியாமல் இருக்கிறது.
15
ஒரு இடத்திலும் உண்மை காணப்படவில்லை; தீமையைவிட்டு விலகுகிறவர்கள் இரையாவார்கள். யெகோவா அதைக்கண்டு, அங்கு நியாயமில்லாதபடியால், கோபங்கொண்டார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options