ஏசாயா 29:1-8
1
அரியேலே, அரியேலே, தாவீது குடியிருந்த பட்டணமே, ஐயோ, உனக்குக் கேடு! வருடத்துடன் வருடத்தைக் கூட்டு, உங்கள் பண்டிகைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கட்டும்.
2
ஆனாலும் நான் அரியேலை முற்றுகையிடுவேன்; அது துக்கித்துப் புலம்பும், அது எனக்கு பலிபீடத்தின் அடுப்பைப் போலிருக்கும்.
3
நான் உனக்கு விரோதமாக உன்னைச் சுற்றி முகாமிடுவேன்; நான் கோபுரங்களால் உன்னைச் சூழ்ந்துகொள்வேன், எனது முற்றுகை வேலைகளை உனக்கு விரோதமாய் அமைப்பேன்.
4
நீ தாழ்த்தப்பட்டு நிலத்திலிருந்து பேசுவாய், உனது பேச்சு புழுதியிலிருந்து முணுமுணுக்கும். உனது குரல் செத்தவனின் ஆவியைப்போல் பூமியிலிருந்து வரும்; உனது பேச்சு புழுதியிலிருந்து தாழ் குரலாய் வரும்.
5
ஆனாலும் யெகோவாவின் நிமித்தம் உனது அநேக பகைவர்கள் திடீரென புழுதியைப்போல் ஆவார்கள்; இரக்கமில்லாதவரின் கூட்டங்கள் பறக்கும் பதரைப்போல் ஆகும். சடுதியாய், ஒரு நொடிப்பொழுதில்,
6
இடி முழக்கத்துடனும் பூமியதிர்ச்சியுடனும், பெருஞ்சத்தத்துடனும் சேனைகளின் யெகோவா அவர்களுக்கெதிராக வருவார். அவர் புயல்காற்றுடனும், சூறாவளியுடனும், எரிக்கும் நெருப்புச் சுவாலையுடனும் வருவார்.
7
அப்பொழுது அரியேலுக்கு விரோதமாய்ப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்தாரும் அதன் அரண்களையும் தாக்கி, முற்றுகையிடுகிறவர்கள் ஒரு கனவுபோலவும், இரவின் தரிசனம் போலவும் மறைந்துபோவார்கள்.
8
அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ, பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும், தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும், சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.
Settings