Skip to content
ஆதியாகமம் 9:1-17

ஆதியாகமம் 9:1-17

1
பின்பு இறைவன் நோவாவையும் அவன் மகன்களையும் ஆசீர்வதித்து சொன்னதாவது, “நீங்கள் பலுகி, எண்ணிக்கையில் பெருகி பூமியை நிரப்புங்கள்.”
2
உங்களைப்பற்றிய பயமும், பீதியும் பூமியிலுள்ள எல்லா விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும்பிராணிகளுக்கும், கடல்வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
3
நடமாடும் உயிரினங்கள் யாவும் உங்களுக்கு உணவாகும். தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்ததுபோல, இப்பொழுது இவை எல்லாவற்றையும் உங்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன்.
4
“ஆனாலும், இறைச்சியை அதன் உயிருள்ளபோது அதாவது இரத்தம் அதில் இருக்கும்போது சாப்பிடவேண்டாம்.
5
உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் நிச்சயமாக ஈடு கேட்பேன். ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதரிடமும் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவர்களோடிருக்கும் சக மனிதரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
6
“யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால், அவர்களுடைய இரத்தமும் மனிதராலேயே சிந்தப்பட வேண்டும்; ஏனெனில், இறைவன் மனிதரை இறைவனின் சாயலிலேயே படைத்திருக்கிறார்.
7
நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.”
8
பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்:
9
“நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் இப்பொழுது என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
10
உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய பூமியின் எல்லா உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
11
‘வெள்ளத்தினால் இனி ஒருபோதும் எல்லா உயிர்களும் அழிக்கப்படமாட்டாது; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார்.
12
மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் எல்லா உயிரினங்களோடும், வரப்போகும் எல்லா சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே:
13
நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே.
14
நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம்,
15
உங்களோடும் எல்லாவித உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் அழிக்கும்படி தண்ணீர் வெள்ளமாய் பெருகாது.
16
மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார்.
17
இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options