Skip to content
கலாத்தியர் 2:16-21

விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்

கலாத்தியர் 2:16-21
16
ஆனால் ஒருவன் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனாலே அல்ல, இயேசுகிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலமாகவே, நீதிமானாக்கப்படுகிறான் என்பது நமக்குத் தெரியும். அதனாலேதான், நாமும் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால் அல்ல, கிறிஸ்துவின் விசுவாசத்தின்மூலமாய் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால், ஒருவனுமே நீதிமானாக்கப்படுவதில்லை.
17
“கிறிஸ்துவில் நீதிமான்களாக்கப்படும்படி விரும்புகிற, நாமும் பாவிகளாய் இருக்கிறோம் என்றால் கிறிஸ்து பாவத்தைப் பெருகச்செய்கிறார் என்பது அர்த்தமா? ஒருபோதும் இல்லை.
18
ஆனால் நான் அழித்ததைத் திரும்பவும் நான் கட்ட முயன்றால், மோசேயின் சட்டத்தை மீறுகிறவன் என்பதையே அது காட்டுகிறது.
19
“நான் இறைவனுக்கென்று வாழும்படி மோசேயின் சட்டத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கே இறந்தேன்.
20
கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்பொழுது வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் வாழ்கிறார். இந்த மாம்சத்தில் இப்பொழுது நான் வாழ்கிற வாழ்க்கையை இறைவனுடைய மகனின் விசுவாசத்தினாலேயே வாழ்கிறேன். அவரே என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கொடுத்தார்.
21
இறைவனுடைய கிருபையை நான் புறக்கணிக்கமாட்டேன். ஏனெனில் நீதியை மோசேயின் சட்டத்தின் மூலமாய் அடைய முடியுமானால், கிறிஸ்து இறந்தது வீணானதே!”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options