எஸ்றா 7:14-26
14
உன் கையில் இருக்கிற உன் இறைவனின் சட்டத்தின்படி யூதாவையும், எருசலேமையும் விசாரிப்பதற்காக நீ அனுப்பப்படுகிறாய். நீ அரசனாலும் அவருடைய ஏழு ஆலோசகர்களாலும் அனுப்பப்படுகிறாய்.
15
மேலும், நீ அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் எருசலேமில் வாழ்கின்ற இஸ்ரயேலின் இறைவனுக்குத் தாராளமாய்க் கொடுத்த வெள்ளியையும், தங்கத்தையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
16
பாபிலோன் நாட்டிலிருந்து உனக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டுபோ. அத்துடன் எருசலேமில் இருக்கிற தங்கள் இறைவனுக்கென மக்களும், ஆசாரியரும் கொடுத்திருக்கிற சுயவிருப்பக் காணிக்கை யாவையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
17
இப்பணத்தைக் கொண்டு காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும் அவற்றுடன் அவற்றுக்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் வாங்கக் கவனமாயிரு. அவற்றை எருசலேமில் இருக்கிற உன் இறைவனின் ஆலயத்தின் பலிபீடத்தில் பலியிடு.
18
மிகுதியான வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டு இறைவனின் திட்டப்படி நீயும் உன் சகோதர யூதர்களும் நலமாய்த் தோன்றும் எதையும் செய்யலாம்.
19
உனது இறைவனுடைய ஆலயத்தின் வழிபாட்டுக்காக உன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் எருசலேமின் இறைவனிடத்தில் ஒப்புவி.
20
அத்துடன் உன்னுடைய இறைவனின் ஆலயத்தில் வேறு ஏதாவது கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அரச திரவிய களஞ்சியத்திலிருந்து அது உனக்குக் கொடுக்கப்படும்.
21
அர்தசஷ்டா அரசனாகிய நான் ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருக்கும் எல்லா பொருளாளர்களுக்கும், ஆசாரியனாகவும் பரலோகத்தின் இறைவனின் சட்டங்களைக் கற்பிக்கிறவனுமான எஸ்றா உங்களிடம் கேட்கிறதையெல்லாம் காலம் தாழ்த்தாது கொடுக்கக் கவனமாயிருக்கும்படி உத்தரவிடுகிறேன்.
22
நூறு தாலந்து வெள்ளி, நூறுபடி கோதுமை நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் ஒலிவ எண்ணெய் ஆகிய அளவுவரை கொடுங்கள். அத்துடன் தேவையான அளவு உப்பையும் கொடுங்கள்.
23
பரலோகத்தின் இறைவன் விவரித்தபடி, எல்லாம் பரலோக இறைவனின் ஆலயத்திற்காகக் கவனத்துடன் செய்யப்படட்டும். அரசனுடைய பிரதேசத்துக்கும், அவனுடைய மகன்களுக்கும் எதிராக ஏன் அவரின் கோபம் உண்டாக வேண்டும்.
24
அத்துடன் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர், இறைவனின் மற்ற ஆலய ஊழியக்காரர் ஆகியோரிடம் எவ்வித வரியோ, தீர்வையோ, திறையோ வசூலிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையென்பதை நீங்கள் அறியவேண்டும்.
25
எஸ்றாவாகிய நீயோ, உன்னிடம் இருக்கும் உனது இறைவனின் ஞானத்தின்படி, நதிக்கு மறுகரையில் இருக்கும் மக்களான உன் இறைவனின் சட்டங்களை அறிந்திருக்கும் யாவருக்கும் நீதி வழங்கும்படி, நீதிபதிகளையும், உப நீதிபதிகளையும் நியமி. அவற்றை அறியாத மக்களுக்கு நீ கற்பிக்க வேண்டும்.
26
உனது இறைவனின் சட்டங்களுக்கும், அரசனின் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாதவன் எவனோ, அவன் மரண தண்டனை, நாடுகடத்தப்படல், சொத்துக்கள் பறிமுதல் அல்லது சிறைத் தண்டனை ஆகியவற்றில் ஒன்றினால் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
Settings