Skip to content
எசேக்கியேல் 33:1-20

எசேக்கியேல் 33:1-20

1
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2
“மனுபுத்திரனே, உன்னுடைய நாட்டு மக்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் ஒரு நாட்டுக்கு விரோதமாய் வாளைக் கொண்டுவரும்போது, நாட்டு மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு, அவனைத் தம் காவற்காரனாக வைத்தபின்பு,
3
அவன், நாட்டுக்கு விரோதமாக வரும் வாளைக்கண்டதும், எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கிறான்.
4
அப்பொழுது எவனாகிலும் அந்த எக்காளத் சத்தத்தைக் கேட்டும் எச்சரிக்கையாக இல்லாமல் இருந்தால், வாள் வந்து அவன் உயிரைப் பறித்துவிடும். அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மீதே இருக்கும்.
5
எக்காளத் தொனியைக் கேட்டும் அவன் எச்சரிப்பை ஏற்கவில்லை, ஆகையால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மீதே இருக்கும். எச்சரிப்பை அவன் ஏற்றிருப்பின் அவன் தன்னைத்தானே பாதுகாத்திருந்திருப்பான்.
6
ஆனால், வாள் வருகிறதைக் காவலாளி கண்டும், மக்களை எச்சரிப்பதற்காக எக்காளத்தை ஊதாமலிருந்தால், வாள் வந்து அவர்களில் ஒருவனுடைய உயிரைப் பறிக்குமாயின், அந்த மனிதன் தன் பாவத்தினிமித்தமே அழிக்கப்படுவான். ஆனால் நான் அவனுடைய இரத்தப்பழிக்கு அக்காவலாளியிடம் கணக்குக்கேட்பேன்.’
7
“மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக நியமித்திருக்கிறேன். ஆதலால் நீ, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களுக்கு எனது எச்சரிப்பைக் கொடு.
8
நான் கொடியவன் ஒருவனிடம், ‘கொடியவனே, நீ நிச்சயமாய் சாவாய்’ என கூறும்போது, அக்கொடியவன் தன் வழிகளை விட்டுத் திரும்பும்படி நீ அவனிடம் பேசாமற்போனால், அந்தக் கொடியவன் தன் பாவத்திலே மரிப்பான். அவனுடைய இரத்தப்பழிக்கு உன்னிடமே நான் கணக்குக்கேட்பேன்.
9
ஆயினும், அக்கொடியவன் தன் வழிகளை விட்டுத் திரும்பும்படி நீ எச்சரித்தும், அதை அவன் ஏற்காவிட்டால், அவன் தன் பாவத்தின் நிமித்தமே மரிப்பான். நீயோ உன்னைக் காத்துக்கொள்வாய்.
10
“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு சொல்லவேண்டியதாவது: ‘ “நீங்கள் எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்களுக்குப் பாரமாயின. அவைகளாலே நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோமே! அப்படியானால் நாங்கள் வாழ்வது எப்படி? என சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?” ’
11
ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்கிறதாவது, ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, கொடியவர்களின் மரணத்தில் நான் மகிழ்வதில்லை; அவர்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பி வாழ்வதையே விரும்புகிறேன் என்பதும் நிச்சயம். திரும்புங்கள், உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்புங்கள்; இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?’ என்கிறார் என்று அவர்களுக்குச் சொல்.
12
“ஆதலால் மனுபுத்திரனே, உனது நாட்டு மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது: ‘நீதியானவன் கீழ்ப்படியாதபோது, அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றமாட்டாது. கொடியவன் தன் கொடிய வழிகளிலிருந்து திரும்பும்போது, அவனுடைய கொடுமை அவன் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாயிருக்கவும் மாட்டாது. நீதியானவன் பாவம் செய்வானாயின் அவனுடைய முந்திய நீதியினிமித்தம் அவன் வாழ்வதற்கு அனுமதிக்கப்படமாட்டான்.’
13
ஆனால் நீதிமான் ஒருவன் நிச்சயமாக வாழ்வான் என நான் கூறியிருக்க, அவன் தன் நீதியிலே நம்பிக்கை வைத்து, தீமைகளைச் செய்வானேயாகில் அவன் முன்செய்த நீதியான காரியங்கள் எதுவுமே நினைக்கப்படுவதில்லை. அவன் தான் செய்த தீமையினிமித்தம் மரிப்பான்.
14
மேலும் நான் ஒரு கொடியவனிடம், ‘நிச்சயமாக நீ சாவாய்’ எனச் சொல்லியிருக்க, அவன் தன் பாவத்திலிருந்து திரும்பி, நீதியும் சரியானதையும் செய்து,
15
அவன் கொடுத்த கடனுக்காகப் பெற்றுக்கொண்ட அடைமானத்தையும் மீளக்கொடுத்து, தான் திருடியவற்றையும் திருப்பிக் கொடுத்து, வாழ்வு கொடுக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி, தீமைசெய்யாது விடுவானாயின், நிச்சயமாக அவன் வாழ்வான். அவன் சாகமாட்டான்.
16
அவன் செய்த பாவங்கள் எதுவுமே அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை. அவன் நீதியும் சரியானதையும் செய்தானே. நிச்சயமாக அவன் வாழ்வான்.
17
“ஆயினும், உன் நாட்டு மனிதர், ‘யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறார்கள். ஆனால் அவர்களின் வழிதான் நீதியற்றது.
18
நீதியான ஒருவன் தன் நீதியிலிருந்து திரும்பி தீமைகளைச் செய்வானாகில், அதற்காக அவன் மரிப்பான்.
19
கொடியவனொருவன் தன் கொடுமையிலிருந்து விலகி, நீதியும் நியாயமுமானவற்றைச் செய்வானாயின், அப்படிச் செய்வதன் நிமித்தம் அவன் வாழ்வான்.
20
ஆனாலும், இஸ்ரயேல் குடும்பத்தாரே, ‘நீங்கள் யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்பேன் என்கிறார்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options