எசேக்கியேல் 23:38-49
38
மேலும், அவர்கள் இதையும் எனக்கெதிராகச் செய்தார்கள். அதாவது, அதே வேளையிலேயே எனது பரிசுத்த இடத்தையும் அசுத்தப்படுத்தி, என் ஓய்வுநாளையும் தூய்மையற்றதாக்கினார்கள்.
39
தங்கள் பிள்ளைகளைத் தங்கள் விக்கிரகங்களுக்குப் பலியிட்ட அதே நாளிலேயே அவர்கள் எனது பரிசுத்த இடத்திற்குள் வந்து அதைத் தூய்மையற்றதாக்கினார்கள். அவர்கள் அதைத்தான் எனது வீட்டில் செய்தார்கள்.
40
“மேலும் அவர்கள் வெகுதூரத்திலிருந்து வந்த மனிதர்களுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் வந்தபோது, நீ அவர்களுக்காகக் குளித்து, உன் கண்களுக்கு மையிட்டு, நகைகளையும் போட்டுக்கொண்டாய்.
41
அழகான இருக்கையில் அமர்ந்தாய். அதற்கு முன்னே ஒரு விருந்துக்கான மேஜையை ஆயத்தப்படுத்தி, அத்துடன் எனக்குரியதான வாசனைப் பொருள்களையும் எண்ணெயையும் வைத்தாய்.
42
“கவலையற்ற ஒரு கூட்டத்தின் ஆரவாரம் அவளைச்சுற்றி இருந்தது. அந்த ஒழுங்கீனமான கூட்டத்தோடு பாலைவனத்தின் சபேயர்களும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அப்பெண்ணுக்கும், அவளது சகோதரிக்கும் கைகளில் வளையல்களை அணிவித்து, அவர்களுடைய தலைகளில் அழகிய மகுடங்களைச் சூட்டினார்கள்.
43
பின்பு நான் விபசாரத்தில் களைத்துப்போன அவளைக்குறித்து, ‘அவள் வேசிதானே! அவர்கள் அவளை அப்படியே பயன்படுத்தட்டும்’ என்றேன்.
44
அவர்கள் அவளோடு உறவுகொண்டார்கள். மனிதர்கள் வேசியிடம் நடந்துகொள்வதுபோல, காமவேட்கையுள்ள ஒகோலாள், ஒகோலிபாள் என்னும் பெண்களிடமும் நடந்துகொண்டார்கள்.
45
ஆனால் விபசாரம் செய்து இரத்தம் சிந்தும் பெண்களைத் தண்டிப்பதுபோல, நீதியுள்ள மனிதர் அவர்களைத் தண்டிப்பார்கள். ஏனெனில் அவர்கள் விபசாரிகள், அவர்கள் கைகளில் இரத்தம் படிந்திருக்கிறது.
46
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அவர்களுக்கு விரோதமாய் ஒரு கலகக்கூட்டத்தைக் கொண்டுவாருங்கள். கொள்ளையையும் திகிலையும் அவர்களுக்கு மேலாகக் கொண்டுவாருங்கள்.
47
அந்தக் கலகக்கூட்டம் அவர்களைக் கல்லெறிந்து தங்கள் வாள்களால் அவர்களை வெட்டி வீழ்த்தும். அவர்களுடைய மகன்களையும், மகள்களையும் அவர்கள் கொன்று, அவர்களுடைய வீடுகளை எரிப்பார்கள்.
48
“இவ்விதமாய் நான் நாட்டிலுள்ள காம வேட்கைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். அதனால் எல்லாப் பெண்களுமே எச்சரிப்படைந்து உன்னைப் பின்பற்றாதிருப்பார்கள்.
49
உங்களுடைய காம வேட்கைக்குரிய தண்டனையையும் உங்கள் விக்கிரகவழிபாட்டுப் பாவங்களுக்குரிய பலனையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்றார்.”
Settings