யாத்திராகமம் 35:1-19
1
பின்பு மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் கூடிவரச்செய்து அவர்களிடம், “நீங்கள் செய்யவேண்டுமென்று யெகோவா கட்டளையிட்டவைகள் இவையே:
2
நீங்கள் ஆறு நாட்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாள். அது யெகோவாவுக்கான ஓய்வுநாள். அந்த நாளிலே வேலைசெய்பவன் எவனும் கொலைசெய்யப்படுவான்.
3
ஓய்வுநாளில் நீங்கள் வசிக்கும் எந்தக் குடியிருப்புகளிலும் நெருப்பு மூட்டக்கூடாது” என்றான்.
4
பின்னும் மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்திடமும், யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே:
5
உங்களிடம் இருப்பதிலிருந்து யெகோவாவுக்காக ஒரு காணிக்கையை எடுங்கள். யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர விரும்பும் ஒவ்வொருவனும் கொண்டுவர வேண்டியதாவன: “தங்கம், வெள்ளி, வெண்கலம்,
6
நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல்; மென்பட்டுத் துணி, வெள்ளாட்டு உரோமம்,
7
சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல், சித்தீம் மரம்,
8
வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய், அபிஷேக எண்ணெய்க்கும், நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;
9
ஏபோத்திலும், மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.”
10
உங்களில் தொழில் திறமையுள்ளவர்கள் எல்லோரும் வந்து, யெகோவா கட்டளையிட்ட வேலைகளையெல்லாம் செய்யவேண்டும்.
11
“அவையாவன: இறைசமுகக் கூடாரமும் அதற்குரிய மூடுதிரையும், கொக்கிகளும், மரச்சட்டங்களும், குறுக்குச் சட்டங்களும், கம்பங்களுடன் அதன் அடித்தளங்களும்,
12
அத்துடன் சாட்சிப்பெட்டி, அதற்குரிய கம்புகள், கிருபாசனம், சாட்சிப்பெட்டியை மறைக்கும் திரை,
13
மேஜை, அதற்குரிய கம்புகள், மேஜைக்குரிய பொருட்கள், இறைசமுக அப்பம்,
14
வெளிச்சத்திற்கான குத்துவிளக்கு, அதற்குரிய உபகரணங்கள், விளக்குகள், வெளிச்சத்திற்கான எண்ணெய்,
15
தூபபீடம், அதற்குரிய கம்புகள், அபிஷேக எண்ணெய், நறுமணத் தூபம், இறைசமுகக் கூடார நுழைவு வாசலுக்கான திரைச்சீலை,
16
தகன பலிபீடம், அதற்குரிய வெண்கலச் சல்லடை, அதற்குரிய கம்புகள், அதற்குரிய எல்லா பாத்திரங்கள், வெண்கலத் தொட்டி, அதற்குரிய கால்,
17
முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள்,
18
இறைசமுகக் கூடாரத்திற்கும், முற்றத்திற்கும் வேண்டிய கூடார முளைகள், அதற்குரிய கயிறுகள்,
19
பரிசுத்த இடத்தின் ஆசாரியப் பணிசெய்ய உடுத்தப்படும் நெய்யப்பட்ட உடைகள், ஆசாரியனாகிய ஆரோனுக்கு வேண்டிய பரிசுத்த உடைகள், அவனுடைய மகன்கள் ஆசாரியராகப் பணிசெய்யும்போது அவர்களுக்கு வேண்டிய உடைகள் ஆகியனவாகும்.”
Settings