பிரசங்கி 12:1-8
1
நீ உன் வாலிப காலத்தில் உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்; துன்ப நாட்கள் வராததற்குமுன்னும், “வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை” என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள்.
2
அதாவது சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள்.
3
வீட்டுக் காவலாளிகள் தங்கள் முதுமையில் தள்ளாட, பெலமுள்ளவர் கூனிப்போய், அரைக்கும் பெண்கள் வெகுசிலராகி, ஜன்னல் வழியாகப் பார்ப்பவர்கள் ஒளி இழக்குமுன்னும் அவரை நினைவிற்கொள்.
4
வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு அரைக்கும் சத்தம் குறைந்துபோக, பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க, இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை.
5
மேடான இடங்களுக்கும், வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும், வாதுமை மரம் பூக்கும் முன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும், ஆசையும் அற்றுப்போகுமுன்னும், மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும் படைத்தவரை நினைவில்கொள்.
6
வெள்ளிக் கயிறு அறுந்து, தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும், ஊற்றின் அருகே குடம் நொறுங்க, கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும்,
7
மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி, ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன் உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள்.
8
“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான்.
Settings