Skip to content
உபாகமம் 29:16-28

உபாகமம் 29:16-28

16
நாம் எகிப்திலே எப்படி வாழ்ந்தோமென்றும், நமது வழியில் நாடுகளை எப்படிக் கடந்துவந்தோம் என்றும் நீங்கள் அறிவீர்கள்.
17
அவர்களின் மத்தியில் மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட அவர்களுடைய அருவருப்பான உருவச்சிலைகளையும், விக்கிரகங்களையும் அவர்கள் வைத்திருக்கக் கண்டீர்கள்.
18
உங்களுக்குள் ஒரு ஆணோ, பெண்ணோ, வம்சமோ, கோத்திரமோ உங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதை விட்டு விலகி, அந்த நாடுகளுடைய தெய்வங்களை வழிபடப் போகாமலிருக்கும்படி கவனமாயிருங்கள். அப்படிப்பட்ட கசப்பான விஷத்தை உருவாக்கும் வேர், உங்களுக்குள் இராதபடியும் கவனமாயிருங்கள்.
19
ஆணையின் வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், தன்மேல் ஆசீர்வாதம் வரும்படி மன்றாடுகிறான். ஆகையால் அவன், “நான் என் சொந்த வழியிலே தொடர்ந்து நடந்தாலும், நான் பாதுகாப்பாகவே இருப்பேன்” என எண்ணக்கூடாது. அப்படி அவன் நடந்தால் அது செழிப்பான நாட்டின்மேலும், வறண்ட நாட்டின்மேலும் பேரழிவையே கொண்டுவரும்.
20
யெகோவா அவனை ஒருபோதும் மன்னிக்க மனதுடையவராய் இருக்கமாட்டார். அவருடைய கோபமும், வைராக்கியமும் அந்த மனிதனுக்கு விரோதமாய்ப் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்களெல்லாம் அவன்மேல் வரும். யெகோவா அவனுடைய பெயரை வானத்தின்கீழ் இராமல் அற்றுப்போகப்பண்ணுவார்.
21
இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் எல்லா சாபங்களின்படியும், அவனுக்கு அழிவு உண்டாகும்படிக்கு யெகோவா அவனை இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்திலிருந்தும் தனிமைப்படுத்துவார்.
22
அப்பொழுது உங்களுக்குப்பின் வரப்போகிற உங்கள் சந்ததிகளான உங்களுடைய பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், உங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகளையும், யெகோவா அதன்மேல் கொண்டுவந்த நோய்களையும் காண்பார்கள்.
23
நாடு முழுவதும் வெடியுப்புக்களாலும், கந்தகத்தாலும் எரிந்துபோயிருக்கும். அங்கு ஒன்றும் பயிரிடப்படுவதில்லை. ஒன்றும் முளைப்பதுமில்லை. தாவரம் ஒன்றும் வளரவும்மாட்டாது. இந்த நாட்டின் அழிவு யெகோவா தமது கடுங்கோபத்தில் பாழாக்கிப்போட்ட சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் பட்டணங்களின் அழிவைப்போல் இருக்கும்.
24
அப்பொழுது எல்லா நாடுகளும், “யெகோவா ஏன் இந்த நாட்டுக்கு இதைச் செய்தார்? அவருடைய பற்றியெரியும் இந்த கோபம் எதற்காக?” என்று கேட்பார்கள்.
25
அதற்குரிய பதிலோ: “இம்மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின், உடன்படிக்கையைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு விட்டார்கள். அவர்கள் வழிவிலகி வேறு தெய்வங்களை வழிபட்டார்கள்.
26
தாங்கள் அறியாததும், அவர் அவர்களுக்குக் கொடுத்திராததுமான தெய்வங்களை வணங்கினார்கள்.
27
ஆகவே, யெகோவாவினுடைய கோபம் இந்த நாட்டுக்கு விரோதமாகப் பற்றி எரிந்தது. அதினாலே இப்புத்தகத்தில் எழுதியிருக்கும் சாபங்களை எல்லாம் அவர் அந்நாட்டின்மேல் வரப்பண்ணினார்.
28
எனவே இன்றிருக்கின்றபடி, யெகோவா தம்முடைய மிகுந்த கோபத்தினாலும், கண்டிப்பினாலும் அவர்களை அந்நாட்டிலிருந்து வேருடன் பிடுங்கி, இன்னொரு நாட்டுக்குள் தள்ளிவிட்டார்” என்பதாக இருக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options