தானியேல் 11:6-14
6
சில வருடங்களில் தென்திசை அரசனும் வடதிசை அரசனும் நட்புறவு கொள்வார்கள். அதன்பின் தென்திசை அரசனின் மகள் வடதிசை அரசனுக்கு நட்புறவு உடன்படிக்கையை உறுதிப்படுத்த மனைவியாகக் கொடுக்கப்படுவாள். ஆனால் சதித்திட்டம் நீடிக்காது. அவனும் அவனுடைய வல்லமையும் அழிக்கப்படும். அந்நாட்களில் அவளும், அவளுடன்கூட அவளது அரச பாதுகாவலரும், அவளது தந்தையும், அவளுக்கு உதவிசெய்தவனும் அழிக்கப்படுவார்கள்.
7
“அவளுடைய குடும்ப வழியிலிருந்து வந்த ஒருவன், அவளுடைய இடத்தை எடுத்துக்கொள்ளும்படி எழும்புவான். அவன் வடதிசை அரசனுடைய படையைத் தாக்கி, அவனுடைய கோட்டைக்குள் புகுவான். அவன் அவர்களுக்கு எதிராய் சண்டைசெய்து வெற்றிபெறுவான்.
8
அத்துடன் அவன் அவர்களின் தெய்வங்களையும், உலோக உருவச்சிலைகளையும், அவர்களுடைய விலைமதிப்புள்ள வெள்ளிப் பொருட்களையும், தங்கப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு எகிப்திற்குப் போவான். சில வருடங்களுக்கு வடதிசை அரசனுடன் யுத்தம் செய்யாமல் விட்டுவிடுவான்.
9
பின்பு வடதிசை அரசன், தென்திசை அரசனின் பிரதேசத்தின்மேல் படையெடுப்பான். ஆயினும் அவன் பின்பு தனது நாட்டுக்குத் திரும்புவான்.
10
வடதிசை அரசனின் மகன்கள் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்து பெரியதொரு இராணுவப்படையைத் திரட்டுவார்கள். அந்தப் படை தடுக்க முடியாத பெருவெள்ளம்போல் அடித்துச்சென்று, மிக வேகமாகத் தென்திசை அரசனின் கோட்டைவரை சென்று சண்டையிடும்.
11
“அப்பொழுது தென்திசை அரசன் மிகுந்த கோபத்துடன், தனது படையுடன் அணிவகுத்துச்சென்று, வடதிசை அரசனுக்கெதிராகப் போரிடுவான். வடதிசை அரசன் பெரிய படையைத் திரட்டுவான். ஆயினும் அது தோல்வியே அடையும்.
12
வடதிசை அரசனின் படை, சிறைப்பிடித்துச் செல்லப்படுவதால், தென்திசை அரசன் பெருமையினால் நிறைந்து, ஆயிரக்கணக்கானோரைக் கொலைசெய்வான். ஆயினும் அவன் வெற்றியுடையவனாய் நிலைத்திருக்கமாட்டான்.
13
வடதிசை அரசன் முன்பு இருந்த படையைவிட பெரியதொரு படையைத் திரும்பவும் திரட்டி, சில வருடங்களுக்குப் பின்பு முற்றிலும் ஆயுதம் தரித்த ஒரு பெரிய படையுடன் முன்னேறிச் செல்வான்.
14
“அந்தக் காலங்களில் அநேகர் தென்திசை அரசனுக்கெதிராக எழும்புவார்கள். இந்தத் தரிசனம் நிறைவேறும்படியாக, உன் சொந்த மக்களுக்குள்ளேயும் வன்முறையாளர்கள் கலகம்செய்து அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். ஆயினும் அவர்கள் வெற்றியடையமாட்டார்கள்.
Settings