அப்போஸ்தலர் 28:17-23
17
மூன்று நாட்களுக்குபின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது, பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ, எதையுமே நான் செய்யவில்லை. ஆனால் நான் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன்.
18
அவர்கள் என்னை விசாரணை செய்து, மரணதண்டனையை பெறக்கூடிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள்.
19
ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்யும்படி கேட்க நேர்ந்தது. ஆனால், என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடத்தில் இருந்ததில்லை.
20
இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகவே நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.
21
அதற்கு அவர்கள், “உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில், யாரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை.
22
ஆனால், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், இந்தப் பிரிவினை மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகிறதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள்.
23
அவர்கள் பவுலைச் சந்திக்க ஒருநாளை நியமித்து, பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலைவரை, இறைவனுடைய அரசைக் குறித்து விவரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயினுடைய சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து, அவர்களை நம்பவைக்க முயற்சித்தான்.
Settings