2 சாமுயேல் 6:16-23
16
யெகோவாவின் பெட்டி தாவீதின் நகரத்திற்குள்ளே வருகின்றபோது, சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அரசன் தாவீது யெகோவாவுக்கு முன்பாகத் துள்ளிக் குதித்து ஆடுவதைக் கண்டதும் அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள்.
17
அவர்கள் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்து தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்திற்குள் அதற்குரிய இடத்தில் அதை வைத்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவுக்கு முன்பாக தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான்.
18
தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தியபின் சேனைகளின் யெகோவாவின் பெயராலே மக்களை ஆசீர்வதித்தான்.
19
பின்பு அவன் அங்கேயிருந்த இஸ்ரயேலின் திரள்கூட்டமான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். பின்பு எல்லா மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
20
தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள்.
21
அதற்குத் தாவீது மீகாளிடம், “நான் யெகோவாவுக்கு முன்பாகவே ஆடினேன். அவர் யெகோவாவின் மக்களான இஸ்ரயேலரின்மேல் என்னை ஆளுநனாக நியமித்தபோது, உன்னுடைய தகப்பனையோ அல்லது அவருடைய வீட்டாரில் ஒருவனையோவிட, என்னையே தெரிந்துகொண்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடுவேன்.
22
நான் அதைப் பார்க்கிலும் இன்னும் அதிகமாய் மதிப்பற்றவனாவேன்; எனது பார்வையிலுங்கூட நான் தாழ்மைப்படுவேன். ஆனால் நீ சொல்லிக் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண்களால் நான் கனம்செய்யப்படுவேன்” என்றான்.
23
சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள்.
Settings