2 சாமுயேல் 10:8-14
8
அம்மோனியர் வெளியே வந்து பட்டண வாசலில் அணிவகுத்து நின்றார்கள். ஆனாலும் சோபாவிலிருந்தும் ரேகோபிலிருந்தும் வந்த சீரியரும், தோபையும் மாக்காவையும் சேர்ந்த மனிதரும் தாங்களாகவே நாட்டின் திறந்தவெளியில் நின்றார்கள்.
9
அப்பொழுது யோவாப் தனக்கு முன்னும் பின்னும் எதிரிகளின் படை அணிவகுத்து நிற்பதைக் கண்டதும், இஸ்ரயேலின் இராணுவவீரரில் திறமைமிக்க சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களை சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான்.
10
மற்ற இராணுவவீரரை தன் சகோதரன் அபிசாயின் தலைமையின்கீழ் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான்.
11
பின்பு யோவாப் தன் சகோதரனிடம், “சீரியர் என்னிலும் பலமுள்ளவர்களாயிருந்தால் நீ என்னை விடுவிக்க வரவேண்டும்; அம்மோனியர் உன்னிலும் மிக பலமுள்ளவர்களாயிருந்தால் நான் உன்னை விடுவிக்க வருவேன்.
12
ஆனாலும் தைரியமாய் இரு; நமது மக்களுக்காகவும், இறைவனின் பட்டணங்களுக்காகவும், தைரியமாக போரிடுவோம். யெகோவா தன் பார்வைக்கு நலமானபடிச் செய்வார்” என்றான்.
13
எனவே யோவாபும், அவனோடிருந்த இராணுவவீரரும் சீரியருடன் போரிட முன்னேறியபோது, சீரியர் அவனுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்.
14
சீரியர் தப்பியோடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடி பட்டணத்திற்குள் நுழைந்தார்கள். எனவே யோவாப் அம்மோனியருடன் போரிட்டபின் எருசலேமுக்கு திரும்பிவந்தான்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings