Skip to content
2 இராஜாக்கள் 9:21-28

2 இராஜாக்கள் 9:21-28

21
உடனே யோராம், “என்னுடைய தேரை ஆயத்தப்படுத்துங்கள்” என்றான். அவர்கள் அவனுடைய தேரை ஆயத்தப்படுத்தியதும் இஸ்ரயேலின் அரசனான யோராமும் யூதாவின் அரசனான அகசியாவும் தங்கள் சொந்தத் தேர்களில் ஏறிக்கொண்டு யெகூவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான நிலத்தில் அவர்கள் யெகூவைச் சந்தித்தார்கள்.
22
யோராம் யெகூவை கண்டவுடன், “யெகூவே, சமாதானமாகவா வந்திருக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “உன் தாயாகிய யேசபேலின் விக்கிரக வணக்கங்களும், பில்லிசூனியங்களும் அளவுக்கு மிஞ்சியிருக்கும்வரை சமாதானம் எப்படியிருக்கும்” என்றான்.
23
அதைக் கேட்டதும் யோராம், “அகசியாவே, இது துரோகம்” என்று சத்தமிட்டபடி தன் தேரைத் திருப்பிக்கொண்டு தப்பியோட பார்த்தான்.
24
ஆனால் யெகூ தன் வில்லை வளைத்து யோராமின் தோள்களுக்கிடையில் எய்தான். அம்பு அவனுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றதும் அவன் தன் தேரிலேயே விழுந்தான்.
25
அப்பொழுது யெகூ தனது அதிகாரியாகிய பித்காரிடம், “அவனை எடுத்து யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் எறிந்துவிடு. முன்பு ஒரு நாள் நானும் நீயும் இவனுடைய தகப்பனான ஆகாபுக்குப் பின்னால் தேரில் போகும்பொழுது, யெகோவா இவனைக் குறித்துச் சொன்ன இறைவாக்கை ஞாபகப்படுத்திக்கொள்.
26
அன்று யெகோவா, ‘நேற்று நான் நாபோத்தின் இரத்தத்தையும், அவன் மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் என்று அறிவிக்கிறார். இதே நிலத்தில் உன்னையும் நான் பழிவாங்குவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்று ஆகாபுக்குக் கூறியிருந்தார். ஆகவே இப்போது இவனைத் தூக்கி யெகோவாவின் வாக்குப்படி அந்தத் தோட்டத்தில் எறிந்துவிடு” என்று சொன்னான்.
27
யூதாவின் அரசனான அகசியா நடந்தவற்றைக் கண்டபோது, பெத்ஹாகானுக்குப் போகும் பாதையில் தப்பி ஓடினான். யெகூ அவனையும் கொல்லுங்கள் என்று பலமாகக் கத்திக்கொண்டு அவனைத் துரத்திப் போனான். இப்லேயாமுக்கு அருகே உள்ள கூருக்கு ஏறிப்போகும் சரிவான பாதையில் அகசியாவை அவனுடைய தேரிலேயே வைத்து யெகூவின் படையினர் காயப்படுத்தினார்கள். ஆயினும் அவன் மெகிதோவுக்குத் தப்பி ஓடிப்போய் அங்கே இறந்தான்.
28
அவனுடைய வேலையாட்கள் அவனின் உடலை தேரில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோய் தாவீதின் நகரத்திலிருந்த அவனுடைய முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options