2 இராஜாக்கள் 9:11-20
11
யெகூ வெளியே வந்து தன் அதிகாரிகளிடம் போனபோது, அவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து, “என்ன நல்ல செய்தியா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் ஏன் வந்தான்?” என்று கேட்டான். அதற்கு யெகூ, “அந்த மனுஷன் யார் என்றும், எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுபவன் என்றும் உங்களுக்குத் தெரியும்தானே!” என்றான்.
12
அதற்கு அவர்கள், “அப்படியல்ல. அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். அதற்கு யெகூ, “அவன் எனக்குச் சொன்னது இதுவே, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் எல்லா இஸ்ரயேலருக்கும் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணினேன்’ என்பதாகும்” என்றான்.
13
அவர்கள் விரைவாக தங்கள் மேலாடைகளைக் கழற்றி அவனுக்குக் கீழே அந்தப் படிகளில் விரித்தார்கள். அதன்பின் எக்காளம் ஊதி, “யெகூவே அரசன்” என்று ஆரவாரித்தார்கள்.
14
நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ யோராமுக்கு எதிராகச் சதித்திட்டம் போட்டான். அந்நாட்களில் யோராம் எல்லா இஸ்ரயேலரோடும் சேர்ந்து ராமோத் கீலேயாத்தை சீரிய அரசனான ஆசகேலின்வசம் போய்விடாதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தான்.
15
ஆனால் யோராம் சீரிய அரசனான ஆசகேலுடன் செய்த யுத்தத்தில் சீரியரால் காயப்படுத்தப்பட்டு, அக்காயங்களை ஆற்றுவதற்கு யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான். அப்பொழுது யெகூ, “நீங்கள் எனக்கு ஆதரவாயிருந்தால் நகரத்தைவிட்டு யாரும் வெளியேறி யெஸ்ரயேலுக்குப்போய் இச்செய்தியை கூறிவிடாதபடி பாருங்கள்” என்று கூறினான்.
16
அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான். யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப் பார்க்க, யூதாவின் அரசனான அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
17
யெஸ்ரயேலின் கோபுரத்திலிருந்து நகரத்தைக் காவல் செய்தவன் யெகூவின் படைகள் முன்னேறி வருவதைக் கண்டு, “சில படைகள் வருவதாகத் தெரிகிறது” என்று பலமாகச் சத்தமிட்டான். அப்பொழுது யோராம், “ஒரு குதிரைவீரனை அழைத்து, வருபவர்களைப் போய்ச் சந்தித்து, ‘சமாதானமாக வருகிறீர்களா’ என்று கேட்டுவரும்படி அனுப்புங்கள்” என்றான்.
18
எனவே குதிரைவீரன் போய் யெகூவிடம், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று கூறினான். அதற்கு யெகூ பதிலாக, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான். அப்பொழுது காவல் காப்பவன் அரசனிடம், “தூதுவன் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அவன் திரும்பி வரவில்லை” என்று கூறினான்.
19
அப்பொழுது அரசன் இரண்டாம் குதிரைவீரனையும் அனுப்பினான். அவன் அவர்களிடம் போய், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று சொன்னான். யெகூ அவனையும் பார்த்து, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான்.
20
காவலாளி அரசனிடம், “அவனும் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் திரும்பிவருவதாக இல்லை. தேரைச் செலுத்தும் விதத்தைப் பார்த்தால் நிம்சியின் மகன் யெகூவைப்போல் தெரிகிறது. அவன் ஒரு பைத்தியக்காரனைப் போலவே தேரை ஓட்டுகிறான்” என்றான்.
Settings