1 இராஜாக்கள் 8:23-53
23
அவன் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை. உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே.
24
உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர்.
25
“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ செய்ததுபோலவே உன் மகன்களும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படி தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே.
26
இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனே, உமது அடியானாகிய எனது தகப்பன் தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும்.
27
“ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதே. அப்படியிருக்க நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்!
28
ஆயினும் என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும். இன்று உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக.
29
‘என் பெயர் விளங்குமென்று,’ நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. அப்பொழுது உமது அடியவன் இந்த இடத்தை நோக்கி வேண்டிக்கொள்ளும் மன்றாட்டை நீர் கேட்பீர்.
30
இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும்.
31
“ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால்,
32
அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும்.
33
“உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது,
34
பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும்.
35
“உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது,
36
நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும்.
37
“நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும்,
38
அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன்தன் மனதின் துன்பங்களை உணர்ந்தவர்களாய் இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ, விண்ணப்பத்தையோ செய்தால்,
39
உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். எல்லா மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே.
40
அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து நடப்பார்கள்.
41
“உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியனும் உம்முடைய பெயரின் நிமித்தம் வரலாம்.
42
ஏனெனில் மனிதர் உமது பெரிதான பெயரையும், உமது வலிமைமிக்க கரத்தையும், நீட்டிய புயத்தையும் பற்றிக் கேள்விப்படுவார்கள். இவ்விதமாய் அந்நியர் வந்து இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது,
43
நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள்.
44
“உம்முடைய மக்களை நீர் எங்கேயாகிலும் அவர்களுடைய பகைவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினால், அவர்கள் யுத்தத்திற்குப் போவார்கள்; அவ்வேளையில் நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், உமது பெயருக்காக நான் கட்டிய ஆலயத்தையும் நோக்கி யெகோவாவிடம் அவர்கள் மன்றாடும்போது,
45
பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும்.
46
“பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் தூரமாகவோ அருகிலோ சிறைபிடித்துக்கொண்டு போவார்கள்.
47
அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று அவர்களை சிறைப்பிடித்தவரின் நாட்டிலே உம்மிடம் கெஞ்சி,
48
அவர்கள் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோன தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால்,
49
நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும்.
50
உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்; உமக்கு எதிராகச் செய்த எல்லாக் குற்றங்களையும் அவர்களுக்கு மன்னித்து, அவர்களை வெற்றிகொண்டவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்யும்.
51
ஏனெனில் அவர்கள், உம்முடைய மக்களும், உம்முடைய உரிமைச்சொத்துமாய் இருக்கிறார்கள். இரும்பு உருக்கும் சூளையாகிய அந்த எகிப்திலிருந்து நீரே அவர்களை வெளியே கொண்டுவந்தீர்.
52
“உமது அடியானுடைய விண்ணப்பத்திற்கும், உமது மக்களாகிய இஸ்ரயேலின் விண்ணப்பத்திற்கும் உமது கண்கள் திறந்திருப்பதாக. அவர்கள் உம்மை நோக்கிக் கதறும் போதெல்லாம் அவர்களுக்குச் செவிகொடுப்பீராக.
53
ஆண்டவராகிய யெகோவாவே, நீர் எங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, உமது அடியவன் மோசே மூலம் அறிவித்தபடியே நீர் உலகிலுள்ள எல்லா மக்களிலும் இஸ்ரயேலரை உமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டீர்” என்றான்.
Settings