Skip to content
1 இராஜாக்கள் 21:20-29

1 இராஜாக்கள் 21:20-29

20
அப்பொழுது ஆகாப் எலியாவிடம், “என் பகைவனே என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான். எலியா அதற்குப் பதிலாக, “யெகோவாவின் பார்வையில் தீமைசெய்யும்படி நீ உன்னை விற்றுப்போட்டபடியினால், நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன்.
21
நான் உன்மீது பெரும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன். உன் சந்ததிகளை நான் அழித்துவிடுவேன். அடிமையோ, விடுதலையானவனோ இஸ்ரயேலில் ஆகாபுக்குச் சொந்தமான ஒரு ஆணும் உயிருடன் மீதியாக இருக்காதபடி அழித்துவிடுவேன்.
22
நீ எனக்குக் கோபமூட்டி முழு இஸ்ரயேல் மக்களையும் பாவம் செய்யப்பண்ணியபடியால், நான் உன் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகன் பாஷாவின் குடும்பத்தைப்போலவும் மாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
23
“மேலும் யேசபேலைக் குறித்து யெகோவா, ‘யெஸ்ரயேலின் பட்டண மதிலின் அருகே அவளை நாய்கள் தின்னும்’ என்று சொல்கிறார்.
24
“பட்டணத்திற்குள் இறக்கிற ஆகாபின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும் என்றும் பட்டணத்திற்கு வெளியே இறக்கிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றும் கூறுகிறார்” என்றான்.
25
தன் மனைவியாகிய யேசபேலினால் தூண்டப்பட்டு, யெகோவாவுக்குமுன் தீமைசெய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல் வேறு யாரும் இருந்ததில்லை.
26
இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய எமோரியரைப்போலவே, அவனும் விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் கீழ்த்தரமாக நடந்தான்.
27
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, துக்கவுடையை உடுத்திக்கொண்டு உபவாசித்தான். அத்துடன் அவன் மனமுடைந்தவனாய் துக்கவுடையில் படுத்தும் நடந்தும் திரிந்தான்.
28
அப்போது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.
29
“எனக்கு முன்பாக ஆகாப் எவ்வளவாகத் தன்னைத் தாழ்த்தியிருக்கிறான் என்று கண்டாயா? அவன் தன்னைத் தாழ்த்தினபடியால், நான் இந்தப் பேரழிவை அவனுடைய வாழ்நாட்களில் கொண்டுவரமாட்டேன். ஆயினும், அவனுடைய மகனின் நாட்களில், அவன் குடும்பத்தின்மேல் அந்த பேரழிவைக் கொண்டுவருவேன்” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options