ரோமர் 3:21-28
21
இப்பொழுது மோசேயின் சட்டம் இல்லாமல், இறைவனிடமிருந்து வரும் வேறொரு நீதியை அறியமுடிகிறது. அதற்கு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் சாட்சியிடுகின்றன.
22
இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை.
23
ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள்.
24
ஆனால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவினால் வந்த மீட்பின் மூலமாக, இலவசமாகவே இறைவனுடைய கிருபையினால் நீதிமான்களாகிறார்கள்.
25
இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார். இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார்.
26
இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார்.
27
ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.
28
ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம்.
Settings