வெளிப்படுத்தல் 11:15-19
15
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.”
16
அப்பொழுது இறைவனுக்கு முன்பாக, தங்களுடைய அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டார்கள்.
17
அவர்கள் சொன்னதாவது: “இருக்கிறவரும் இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக்கொண்டு ஆளுகை செய்யத் தொடங்கிவிட்டீர்.
18
ஜனங்கள் கோபங்கொண்டார்கள், உம்முடைய கோபமும் வந்துவிட்டது. இறந்தவர்களை நியாயந்தீர்க்கும் வேளை வந்துவிட்டது, உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும், உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கிற சிறியோர் பெரியோர் யாவருக்கும், வெகுமதி கொடுக்கும் வேளையும் வந்துவிட்டது. பூமியை அழிக்கிறவர்களை, அழிக்கும் வேளையும் வந்துவிட்டது.”
19
பின்பு பரலோகத்திலுள்ள, இறைவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது; அப்போது அவருடைய ஆலயத்திலுள்ள அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. அவ்வேளையில் மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கத்தின் சத்தங்களும், பூமியதிர்ச்சியும், பெரிய கல்மழையும் ஏற்பட்டன.
Settings