சங்கீதம் 132:1-10
1
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, தாவீதையும் அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
2
அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:
3
“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.
4
என் கண்களுக்கு நித்திரையையும், கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.
5
யெகோவாவுக்காக ஒரு இடத்தை, யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை இவற்றைச் செய்யமாட்டேன்.”
6
எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:
7
“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.
8
‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.
9
உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”
10
உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
Settings