மாற்கு 4:3-20
3
“கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
4
அவன் விதைகளைத் விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
5
சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததினால், அது விரைவாக முளைத்தாலும்.
6
வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
7
வேறுசில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன; முட்செடி வளர்ந்து, பயிர்களை நெருக்கிப் போட்டது. அதனால், அவைகள் விளைச்சலைக் கொடுக்கவில்லை.
8
வேறுசில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து முப்பதும், அறுபதும், நூறு மடங்கானதுமாக விளைச்சலைக் கொடுத்தன.”
9
பின்பு இயேசு அவர்களுக்கு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
10
அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைப் பற்றிய விளக்கத்தைக் கேட்டார்கள்.
11
இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது; ஆனால், வெளியில் இருக்கிறவர்களுக்கோ, எல்லா காரியங்களும் உவமைகள் மூலமாகவே சொல்லப்படுகின்றன.
12
இதனால், “ ‘அவர்கள் எப்பொழுதும் கண்டும், ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும், கேட்டும் ஒருபோதும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; இல்லாவிட்டால், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ ” என்றார்.
13
மேலும் இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார்.
14
“விவசாயி வார்த்தையை விதைக்கிறான்.
15
சிலர் பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதை போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன், சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான்.
16
மற்றவர்களோ, கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்.
17
ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விசுவாசத்திலிருந்து விழுந்து போகிறார்கள்.
18
வேறுசிலரோ, முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டும்,
19
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது.
20
வேறுசிலரோ, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு சிலர் முப்பதும், அறுபதும், நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுக்கிறார்கள்” என்றார்.
Settings