Skip to content
லேவியராகமம் 7:11-21

சமாதானப் பலிக்கான சட்டம்

லேவியராகமம் 7:11-21
11
“ ‘ஒருவன் யெகோவாவுக்குக் கொடுக்கும் சமாதான காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே:
12
“ ‘அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாகில், இந்த நன்றிக் காணிக்கையுடன், புளிப்பில்லாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், சிறந்த மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்தவேண்டும்.
13
நன்றி செலுத்துவதற்கான தன் சமாதான காணிக்கையுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
14
அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை யெகோவாவுக்கு அன்பளிப்பான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். சமாதான காணிக்கையின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியருக்கே இது உரியது.
15
நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது.
16
“ ‘எனினும், அவனுடைய காணிக்கை ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ இருந்தால், அவன் பலிசெலுத்தும் நாளிலேயே அதைச் சாப்பிடவேண்டும். ஆனால் ஏதாவது மீதமிருந்தால் அடுத்தநாள் சாப்பிடலாம்.
17
ஆனாலும், மூன்றாம் நாள்வரை விட்டுவைக்கப்பட்ட பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்படவேண்டும்.
18
சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது காணிக்கை செலுத்துபவருக்கு பலனளிக்காது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாவான்.
19
“ ‘சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக எண்ணப்படும் எதிலாவது இறைச்சி பட்டுவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அது எரிக்கப்படவேண்டும். மற்ற இறைச்சியைப் பொறுத்தமட்டில், அதை சம்பிரதாய முறைப்படி சுத்தமாய் இருப்பவன் எவனும் சாப்பிடலாம்.
20
ஆனால் யெகோவாவுக்குச் சொந்தமான சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கிற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
21
மனித அசுத்தத்தையோ அல்லது அசுத்த மிருகத்தையோ அல்லது அசுத்தமும் அருவருப்புமான ஏதாகிலும் பொருளையோ, இவ்வாறான அசுத்தமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு யெகோவாவுக்குரிய சமாதான காணிக்கையின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றார்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options