Skip to content
லேவியராகமம் 16:22-34

லேவியராகமம் 16:22-34

22
அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா பாவங்களையும் தன்மேல் சுமந்துகொண்டு, தனிமையான ஒரு இடத்திற்குப் போகும். அந்த மனிதன் அதை பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும்.
23
“பின்பு ஆரோன் சபைக் கூடாரத்திற்குப் போய், தான் மகா பரிசுத்த இடத்திற்குப் போகுமுன் உடுத்திக்கொண்ட மென்பட்டு உடைகளைக் களைந்து, அவற்றை அங்கே வைத்துவிடவேண்டும்.
24
அவன் ஒரு தூய்மையான இடத்திலே முழுகி, மீண்டும் தனது உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின் அவன் வெளியே வந்து, தனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தனக்கான தகன காணிக்கையையும், மக்களுக்கான தகன காணிக்கையையும் செலுத்தவேண்டும்.
25
பாவநிவாரண காணிக்கை பலியின் கொழுப்பையும் அவன் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
26
“பாவச்சுமை ஆடான வெள்ளாட்டைப் பாலைவனத்தில் போகவிடும் மனிதன், தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.
27
பாவநிவாரண காணிக்கையாக வெட்டப்பட்டதும், இரத்தம் பாவநிவிர்த்தி செய்யும்படி மகா பரிசுத்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டதுமான, காளையினுடைய, வெள்ளாட்டினுடைய மீதமுள்ள பாகங்கள் முகாமுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட வேண்டும். அவற்றின் தோல்களையும், இறைச்சியையும், குடல்களையும் எரிக்கவேண்டும்.
28
இவைகளை எரிக்கிறவன் தன் உடைகளைக் கழுவி, தானும் தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.
29
“இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளை. ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். நீங்கள் எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. தன் நாட்டினனானாலும், உங்கள் மத்தியில் வாழும் பிறநாட்டினனானாலும் வேலைசெய்யக்கூடாது.
30
ஏனெனில் இந்த நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்படி உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். அப்பொழுது நீங்கள் யெகோவா முன்னிலையில் உங்கள் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு சுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
31
இது உங்களுக்கு முழுமையாக இளைப்பாறும் ஓய்வுநாள். இந்நாளில், நீங்கள் உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். இது ஒரு நிரந்தர கட்டளை.
32
அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனின் இடத்துக்குத் தலைமை ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆசாரியனும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் பரிசுத்தமான மென்பட்டு உடைகளை உடுத்திக்கொண்டு,
33
மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும், ஆசாரியருக்காகவும், சமுதாயத்தின் மக்கள் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
34
“இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options