Skip to content
லேவியராகமம் 15:20-33

லேவியராகமம் 15:20-33

20
“ ‘அந்நாட்களில் அவள் படுக்கின்ற படுக்கையும், அவள் உட்காரும் இடமும் அசுத்தமுள்ளதாயிருக்கும்.
21
யாராவது அவளின் படுக்கையைத் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
22
அவள் உட்காரும் எதையாவது யாராவது ஒருவன் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
23
அவள் படுக்கையை அல்லது, அவள் உட்கார்ந்த எதையாவது ஒருவன் தொட்டால், அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
24
“ ‘அந்நாட்களில் ஒருவன் அவளுடன் உறவுகொள்வதினால், அவளுடைய மாதவிடாய் அவனில் படும்போது அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவன் பயன்படுத்தும் எந்தப் படுக்கையும் அசுத்தமாயிருக்கும்.
25
“ ‘ஒரு பெண்ணுக்கு உடலின் இரத்தப்போக்கு மாதவிடாயைவிட வழக்கத்திற்கு மாறாக வந்தால் அல்லது மாதவிடாய் காலம் நீடித்தால், அவள் அந்த மாதவிடாய் காலத்தில் இருந்ததுபோல், இரத்தப்போக்கு இருக்கும்வரைக்கும் அசுத்தமாயிருப்பாள்.
26
அவள் இந்த நாட்களில் படுக்கின்ற கட்டிலும், அவள் உட்காரும் எதுவும், முன்பு மாதவிடாய் நாட்களில் அசுத்தமுள்ளதாய் இருந்ததுபோல, இப்பொழுதும் அசுத்தமுள்ளதாய் இருக்கும்.
27
யாராவது ஒருவன் அவைகளைத் தொட்டால், அவன் அசுத்தமுள்ளவனாவான். அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாவான்.
28
“ ‘அவள் தன் மாதவிடாயிலிருந்து சுத்திகரிக்கப்படும்போது, அவள் ஏழு நாட்களை எண்ணவேண்டும். அதன்பின் சம்பிரதாய முறைப்படி அவள் சுத்தமாவாள்.
29
எட்டாம் நாள் அவள் இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
30
ஆசாரியன் அதில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவளுடைய இரத்தப்போக்கின் அசுத்தத்திற்காக யெகோவா முன்பாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
31
“ ‘நீ இஸ்ரயேலரை அவர்களை அசுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வேறுபடுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியில் இருக்கும் என் வசிப்பிடத்தை அசுத்தப்படுத்துவதால், இஸ்ரயேலர் தங்கள் அசுத்தத்தில் சாகாதபடி, இப்படிச் செய்யவேண்டும்.’ ”
32
ஆகவே உடலில் கசிவு உள்ளவனுக்கும், விந்து கழிவதினால் அசுத்தமுள்ளவனுக்கும்,
33
மாதவிடாய் உள்ள பெண்ணுக்கும், உடல் கசிவுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிற பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options