லேவியராகமம் 14:10-32
10
“எட்டாம் நாளிலே அவன் குறைபாடற்ற இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளையும், ஒரு வயதுடைய குறைபாடற்ற ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையும், ஒரு எப்பா அளவையில் பத்தில் மூன்று பங்கு சிறந்த மாவை எண்ணெய் சேர்த்துப் பிசைந்து அத்துடன் தானியக் காணிக்கையாக ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும்.
11
அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கும் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனையும், அவனுடைய காணிக்கைகளையும் சபைக்கூடார வாசலில் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.
12
“பின்பு ஆசாரியன் இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒன்றை ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
13
பாவநிவாரண காணிக்கை மிருகமும், தகன காணிக்கை மிருகமும் கொல்லப்பட்ட பரிசுத்த இடத்திலேயே, ஆசாரியன் அந்தச் செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக் கொல்லவேண்டும். பாவநிவாரண காணிக்கையைப்போலவே குற்றநிவாரண காணிக்கையும் ஆசாரியனுக்கே உரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
14
ஆசாரியன் குற்றநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுடைய வலது காதின் மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசவேண்டும்.
15
பின்பு ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயில் இருந்து கொஞ்சத்தை எடுத்து தன் இடது உள்ளங்கையில் ஊற்றி,
16
தன் வலது ஆள்காட்டி விரலை, இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் தோய்த்து, யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
17
ஆசாரியன் தன் உள்ளங்கையில் மீதமுள்ள எண்ணெயை, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது மடலிலும், அவனுடைய வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும், ஏற்கெனவே பூசப்பட்டிருக்கும் குற்றநிவாரண காணிக்கை இரத்தத்தின் மேலாக பூசவேண்டும்.
18
ஆசாரியன் தனது உள்ளங்கையிலுள்ள மீதமுள்ள எண்ணெயை சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் தலையில் தடவி, அவனுக்காக யெகோவாவுக்குமுன், பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
19
“பின்பு ஆசாரியன் பாவநிவாரண காணிக்கையைப் பலியிட்டு தன் அசுத்தத்திலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அதன்பின் ஆசாரியன் தகன காணிக்கை மிருகத்தை வெட்டிக் கொல்லவேண்டும்.
20
ஆசாரியன் அதைத் தானியக் காணிக்கையுடன் பலிபீடத்தின்மேல் செலுத்தி, அவனுக்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
21
“ஆனாலும், அவன் ஏழையாய் இருந்து இவற்றை அவன் செலுத்த முடியாதவனானால், தனக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்கு அசைவாட்டப்படும்படி குற்றநிவாரண காணிக்கையாக ஒரு ஆண் செம்மறியாட்டுக் குட்டியையாவது எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் ஒரு எப்பா அளவையில் பத்தில் ஒரு பங்கு சிறந்த மாவை எண்ணெய் கலந்து பிசைந்து அதைத் தானியக் காணிக்கையாகவும், ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும்.
22
அத்துடன் அவன் தன்னால் செலுத்தக்கூடிய இரண்டு புறாக்களையோ, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் செலுத்துவதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
23
“எட்டாம் நாளிலே அவன் அவைகளை தனது சுத்திகரிப்புக்காக யெகோவா முன்னிலையில், சபைக் கூடாரவாசலுக்கு ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
24
ஆசாரியன் ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண செம்மறியாட்டுக் குட்டியையும் காணிக்கையாக எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
25
ஆசாரியன், குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் அதைப் பூசவேண்டும்.
26
அத்துடன் ஆசாரியன், தன் இடது உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி,
27
தன் வலதுகை ஆள்காட்டி விரலால் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் சிறிதளவை யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
28
ஆசாரியன் தன் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் உடலில் குற்றநிவாரண காணிக்கை இரத்தம் பூசப்பட்ட இடங்களிலெல்லாம் அதாவது, வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசவேண்டும்.
29
மேலும், யெகோவாவுக்கு முன்பாக சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி, ஆசாரியன் தன் உள்ளங்கையில் இருக்கும் மீதமுள்ள எண்ணெயை அவனுடைய தலையில் பூசவேண்டும்.
30
பின்பு ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனால் செலுத்தக்கூடிய புறாக்களையோ அல்லது மாடப்புறாக் குஞ்சுகளையோ பலியிடவேண்டும்.
31
அவன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தானியக் காணிக்கையுடன் தகன காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். இவ்விதமாய் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக யெகோவா முன்னிலையில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.”
32
தொற்றும் தோல்வியாதியை உடையவனாயிருந்து, தன் சுத்திகரிப்புக்கான வழக்கமான காணிக்கைகளைச் செலுத்தமுடியாமல் போகும் ஒருவனுக்குரிய விதிமுறைகள் இவையே என்றார்.
Settings