எரேமியா 36:9-19
9
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட ஐந்தாம் வருடம் ஒன்பதாம் மாதத்தில், யெகோவாவுக்கு முன்பாக உபவாசிக்கும் காலம் ஒன்று குறிக்கப்பட்டது. இது எருசலேமில் இருந்த எல்லா மக்களுக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து வந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
10
செயலாளராகிய சாப்பானின் மகன் கெமரியாவின் அறை, யெகோவாவின் ஆலயத்தின் மேல்முற்றத்தில் உள்ள வாசலின் உட்செல்லும் வழியில் இருந்தது. பாரூக் அங்கிருந்து புத்தகச்சுருளிலிருந்த எரேமியாவின் வார்த்தைகளை ஆலயத்திலிருந்த மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான்.
11
சாப்பானின் மகனான கெமரியாவின் மகன் மிகாயா, புத்தகத்திலிருந்து வாசித்த யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டான்.
12
அப்போது அவன் அரண்மனையின் எல்லா அதிகாரிகளும் இருந்த செயலாளருடைய அறைக்குள் போனான். அங்கே செயலாளராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்நாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் சிதேக்கியா மற்றும் எல்லா அதிகாரிகளும் இருந்தார்கள்.
13
பாரூக் புத்தகத்திலிருந்து மக்களுக்கு வாசித்த வார்த்தைகளைக் கேட்ட மிகாயா அவர்களுக்கு எல்லாவற்றையும் சொன்னான்.
14
அதன்பின் எல்லா அதிகாரிகளும் கூஷியின் மகனான செலேமியாவின் பேரனும், நெத்தனியாவின் மகனுமான யெகுதியை பாரூக்கிடம் அனுப்பி, “நீ மக்களுக்கு வாசித்துக் காட்டிய புத்தகச்சுருளை இங்கே கொண்டுவா” என்று சொல்லும்படி கூறினார்கள். ஆகவே நேரியாவின் மகனான பாரூக், புத்தகச்சுருளைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனான்.
15
அவர்கள் அவனிடம், “தயவுசெய்து உட்கார்ந்து எங்களுக்கு அதை வாசி” என்றார்கள். அப்படியே பாரூக் அவர்களுக்கு அதை வாசித்தான்.
16
அவர்கள் இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டபோது பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்து, பாரூக்கிடம், “நாங்கள் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் அரசனிடம் அறிவிக்கவேண்டும்” என்றார்கள்.
17
பின்பு அவர்கள் பாரூக்கிடம், “இவ்வார்த்தைகள் எல்லாவற்றையும் எவ்வாறு நீ எழுத நேர்ந்தது? இதை எரேமியா சொல்லச்சொல்ல நீ எழுதினாயா? எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
18
அப்பொழுது பாரூக், “ஆம் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் எரேமியா சொல்லச்சொல்ல நானே புத்தகச்சுருளில் மையினால் எழுதினேன்” என்று சொன்னான்.
19
அதற்கு அதிகாரிகள் பாரூக்கிடம், “நீயும், எரேமியாவும் போய் ஒளிந்துகொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் ஒருவருக்கும் தெரியக்கூடாது” என்று சொன்னார்கள்.
Settings