Skip to content
எரேமியா 23:1-8

எரேமியா 23:1-8

1
“என்னுடைய மேய்ச்சலின் செம்மறியாடுகளை அழித்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு” என்று யெகோவா அறிவிக்கிறார்.
2
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என் மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்குச் சொல்வது இதுவே: நீங்கள் என்னுடைய மந்தையைக் கவனிக்காமல் அவர்களைச் சிதறப்பண்ணி துரத்திவிட்டீர்கள். நீங்கள் செய்த தீமைக்காக இப்பொழுது நான் உங்கள்மேல் தண்டனையைக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
3
என் மந்தையில் மீதியானவர்களை நான் துரத்திவிட்ட நாடுகளிலிருந்து நானே அவர்களைக் கூட்டிச்சேர்த்து, அவர்களைத் திரும்பவும் அவர்களுடைய மேய்ச்சலிடத்திற்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் செழித்து, எண்ணிக்கையில் அதிகரிப்பார்கள்.
4
அவர்களைப் பராமரிக்கும் மேய்ப்பர்களை அவர்களுக்காக எழுப்புவேன். அவர்கள் இனி பயப்படவோ, பயமுறுத்தப்படவோ, ஒருவராவது தொலைந்துபோகவோ மாட்டார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
5
நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு நீதியின் கிளையை எழுப்புவேன். அவர் ஞானமாய் ஆளுகை செய்யும் ஒரு அரசன். அவர் நாட்டில் நீதியையும், நியாயத்தையும் செய்வார்.
6
அவருடைய நாட்களில் யூதா காப்பாற்றப்படும். இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். யெகோவாவே நமது நேர்மை என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.
7
“எனவே மீண்டும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது மக்கள் இனியொருபோதும், ‘எகிப்திலிருந்து இஸ்ரயேலரைக் கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என ஆணையிடமாட்டார்கள்.
8
அதற்குப் பதிலாக அவர்கள், ‘இஸ்ரயேலின் வழித்தோன்றல்களை வட நாட்டிலிருந்தும், அவர் நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும் கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயம்போல’ என்றே ஆணையிடுவார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் குடியிருப்பார்கள்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options