எரேமியா 16:1-9
1
பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
2
“நீ திருமணம் செய்யவேண்டாம். இந்த இடத்தில் மகன்களையும், மகள்களையும் பெறவும் வேண்டாம்.”
3
மேலும் இந்த இடத்தில் பிறக்கும் மகன்கள், மகள்களைக் குறித்தும், அவர்களின் தாய்மாரான பெண்களையும், தகப்பன்மாரான மனிதர்களைக் குறித்தும் யெகோவா கூறுவது இதுவே:
4
“அவர்கள் பயங்கரமான வியாதிகளால் சாவார்கள். அவர்களுக்காக புலம்ப யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களை யாரும் அடக்கம்பண்ணமாட்டார்கள். அவர்கள் தரையின்மேல் கிடக்கும் குப்பையைப்போல் இருப்பார்கள். அவர்கள் வாளாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள், அவர்களுடைய சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்.”
5
யெகோவா சொல்வது இதுவே: “நீ துக்கவீட்டிற்குள் நுழையாதே. புலம்பவோ, ஆறுதல் வார்த்தை சொல்லவோ போகவேண்டாம். ஏனெனில் அந்த மக்களிடமிருந்து நான் என் ஆசீர்வாதத்தையும், என் அன்பையும், என் அனுதாபத்தையும் எடுத்துவிட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
6
“இந்த நாட்டில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இருவருமே சாவார்கள். அவர்கள் அடக்கம்பண்ணப்பட மாட்டார்கள். அவர்களுக்காகத் துக்கப்படுவதுமில்லை. அவர்களுக்காக ஒருவனும் தன்னை வெட்டிக்கொள்ளவும் மாட்டான். தன் தலையை மொட்டையடிக்கவுமாட்டான்.
7
செத்தவர்களுக்காக துக்கங்கொண்டாடுகிறவர்களை ஆறுதல்படுத்த ஒருவரும் உணவு கொடுக்கமாட்டார்கள். ஒரு தகப்பனோ அல்லது தாயோ செத்தாலுங்கூட துக்கங்கொண்டாடுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவரும் பானமும் கொடுக்கமாட்டார்கள்.
8
“விருந்து வீட்டிற்குள் போகவோ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ குடிக்கவோ உட்கார வேண்டாம்.
9
ஏனெனில் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் உன் கண்களுக்கு முன்பாக, உன் நாட்களில் சந்தோஷத்தின் சத்தத்திற்கும், மகிழ்ச்சியின் சத்தத்திற்கும் ஒரு முடிவுண்டாக்குவேன். மணமகனின் குரலுக்கும், மணமகளின் குரலுக்கும் முடிவுண்டாக்குவேன்.
Settings