ஏசாயா 57:15-19
15
உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான பரிசுத்தர் என்னும் பெயரையுடையவர் சொல்வதாவது: “இறைவனாகிய நான் உயரமான பரிசுத்த இடத்தில் வாழ்கிறேன். ஆனாலும் மனமுடைந்தவர்களுடனும், தாழ்மையான ஆவியுடையவர்களுடனும் இருக்கிறேன். ஆவியில் தாழ்மையுடையவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கவும், மனமுடைந்தவர்களின் இருதயத்தைத் திடப்படுத்தவும் நான் அவர்களுடன் இருக்கிறேன்.
16
நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன். ஏனெனில் அப்பொழுது மனிதனின் ஆவி, என்னால் படைக்கப்பட்ட மனித சுவாசம், எனக்குமுன் சோர்வடைந்துவிடும்.
17
அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன், அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன், ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்.
18
அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்; ஆயினும் நான் அவனைச் சுகப்படுத்துவேன்; அவனை வழிநடத்தி, மீண்டும் அவனுக்கு ஆறுதல் அளிப்பேன்;
19
நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன். தொலைவிலும் அருகிலும் உள்ளவர்களுக்குச் சமாதானம், சமாதானம் என்றும், அவர்களை நான் சுகப்படுத்துவேன்” என்றும் யெகோவா சொல்கிறார்.
Settings