ஏசாயா 19:1-8
1
இது எகிப்தைப் பற்றிய ஒரு இறைவாக்கு: இதோ, யெகோவா விரைந்து செல்லும் மேகமொன்றில் ஏறி எகிப்திற்கு வருகிறார். எகிப்திய விக்கிரகங்கள் அவர்முன் நடுங்குகின்றன; எகிப்தியரின் இருதயங்கள் அவர்களுக்குள்ளேயே உருகுகின்றன.
2
“எகிப்தியனை எகிப்தியனுக்கு விரோதமாக நான் எழுப்பிவிடுவேன்; சகோதரன் சகோதரனுக்கு விரோதமாகச் சண்டையிடுவான். அயலான் அயலானை எதிர்ப்பான், பட்டணம் பட்டணத்தை எதிர்க்கும், அரசு அரசை எதிர்க்கும்.
3
அதனால் எகிப்தியர் இருதயத்தில் சோர்ந்துபோவார்கள்; நான் அவர்களுடைய திட்டங்களை நிறைவேறாதபடி செய்வேன். அவர்கள் விக்கிரகங்களிடமும், இறந்தோரின் ஆவிகளிடமும், குறிசொல்வோரிடமும், ஆவியுலகத் தொடர்புடையோரிடமும் ஆலோசனை கேட்பார்கள்.
4
நான் எகிப்தியரை கொடிய தலைவன் ஒருவனது வல்லமைக்கு ஒப்புக்கொடுப்பேன். அவர்களை கொடூரமான அரசன் ஒருவன் ஆளுவான்” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
5
ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
6
வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.
7
ஆற்றின் முகத்துவாரத்தில், நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும். நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து, பறந்து இல்லாமல் போகும்.
8
மீனவர்கள் புலம்புவார்கள், நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்; தண்ணீருள் வலை வீசுகிறவர்களும் கவலையால் வாடிப்போவார்கள்.
Settings