Skip to content
ஏசாயா 14:4-23

ஏசாயா 14:4-23

4
நீங்கள் பாபிலோனிய அரசனுக்கு விரோதமாக இவ்வாறு கேலி செய்வீர்கள்: ஒடுக்கினவன் எவ்வாறு ஒழிந்துபோனான்; அவன் கோபம் என்ன ஆனது?
5
ஆளுநரின் கொடுங்கோலை, கொடியவரின் கோலை யெகோவா முறித்துவிட்டார்.
6
அந்தக் கொடுங்கோல் மக்கள் கூட்டங்களைத் தன் கோபத்தில் ஓயாமல் அடித்து வீழ்த்தியது. அது நாடுகளைத் தன் கடுங்கோபத்தில் ஓயாது துன்புறுத்தி, அவர்களை அடக்கியது.
7
நாடுகளெல்லாம் ஆறுதலடைந்து, சமாதானமாய் இருக்கின்றன; அவர்கள் அகமகிழ்ந்து பாடுகிறார்கள்.
8
தேவதாரு மரங்களும், லெபனோனின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியில் மகிழ்ந்து சொல்கிறதாவது: “பாபிலோனே, நீ கீழே வீழ்த்தித் தள்ளப்பட்டிருக்கிறாய். அதனால் இப்பொழுது எங்களை ஒரு மரவெட்டியும் அணுகவில்லை.”
9
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள்.
10
அவர்கள் எல்லோரும் உன்னிடம், “நீயும் எங்களைப்போல் பெலவீனமாகிவிட்டாய்; நீயும் எங்களைப் போலாகிவிட்டாய்” என்று சொல்வார்கள்.
11
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன.
12
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஒருகாலத்தில் நாடுகளை வீழ்த்திய நீ, பூமிக்குத் தள்ளப்பட்டு விட்டாயே!
13
நீ உன் இருதயத்தில், “நான் வானத்திற்கு ஏறுவேன்; இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக என் அரியணையை உயர்த்துவேன். பரிசுத்த மலையின் மிக உயரத்தில், சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன்.
14
மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்; மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே.
15
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய்.
16
உன்னைக் காண்போர் உற்றுப்பார்ப்பார்கள். அவர்கள் உன் நிலையைச் சிந்தித்து, “பூமியை நிலைகுலையச் செய்து அரசுகளை நடுங்கப் பண்ணியவன் இவன்தானா?
17
உலகத்தைப் பாலைவனமாக்கி, பட்டணங்களைக் கவிழ்த்து, கைதிகளை வீட்டிற்குத் திரும்பவிடாதவன் இவன்தானா?” என்று சொல்வார்கள்.
18
நாடுகளின் அரசர் அனைவரும் அவரவர் தங்கள் கல்லறையில் சிறப்புடன் படுத்திருக்கிறார்கள்.
19
ஆனால் நீயோ ஒதுக்கப்பட்ட கிளையைப்போல் கல்லறைக்கு வெளியே எறியப்பட்டிருக்கிறாய். வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட பிரேதங்களால் நீ மூடப்பட்டிருக்கிறாய். நீயும் அவர்களுடன் கற்குழிக்குள் எறியப்பட்டிருக்கிறாய். நீ காலின்கீழ் மிதிபடும் பிணத்தைப் போலானாய்.
20
அந்த அரசர்களுடன் நீ அடக்கம் செய்யப்படமாட்டாய். ஏனெனில் உனது நாட்டையே நீ அழித்து உன் மக்களைக் கொன்றாய். கொடியவரின் சந்ததியினரைக் குறித்து இனியொருபோதும் சொல்லப்பட மாட்டாது.
21
அவர்களுடைய முற்பிதாக்களின் பாவங்களுக்காக அவர்களுடைய பிள்ளைகளைக் கொலைசெய்வதற்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்கள் எழுந்து நாட்டை உரிமையாக்கவோ, பூமியைத் தங்கள் பட்டணங்களால் நிரப்பவோ கூடாது.
22
“நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “பாபிலோனின் பெயரையும், அங்கு தப்பியிருப்பவர்களையும், அவளுடைய சந்ததிகளையும் அகற்றிவிடுவேன்” என யெகோவா அறிவிக்கிறார்.
23
“மேலும், அவ்விடத்தை சதுப்பு நிலமாகவும், ஆந்தைகளின் வசிப்பிடமாகவும் ஆக்குவேன்; அழிவின் துடைப்பத்தால் அவனைக் கூட்டித்தள்ளுவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options