ஓசியா 2:8-13
8
நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும், நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன் என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள்.
9
“ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துப்போடுவேன், எனது புதுத் திராட்சை இரசம் ஆயத்தமாகும்போது, அதையும் எடுத்துப்போடுவேன். அவளது நிர்வாணத்தை மூடுவதற்கு நான் கொடுத்திருந்த எனது கம்பளி உடையையும், எனது மென்பட்டு உடையையும் எடுத்துப்போடுவேன்.
10
நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக, அவளது வெட்கக்கேட்டை வெளிப்படுத்துவேன்; எனது கைகளிலிருந்து ஒருவராலும் அவளை விடுவிக்க முடியாது.
11
நான் அவளது எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்: வருடாந்தர விழாக்கள், அமாவாசைகள், ஓய்வுநாட்கள் ஆகிய அவளது நியமிக்கப்பட்ட எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்திவிடுவேன்.
12
தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும், அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன். நான் அவற்றை புதர்க் காடாக்குவேன், காட்டு மிருகங்கள் அவற்றை அழித்துப்போடும்.
13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டிய நாட்களுக்காக, நான் அவளைத் தண்டிப்பேன்; அவள் தன் காதணிகளினாலும் நகைகளினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் காதலர்களைப் பின்தொடர்ந்து போனாள். என்னையோ மறந்துவிட்டாள்” என்று யெகோவா சொல்கிறார்.
Settings