எபிரெயர் 7:1-6
1
இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் அரசனும், மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனுமாயிருந்தான். ஆபிரகாம் அரசர்களைத் தோற்கடித்து திரும்பிவந்து கொண்டிருந்தபோது, இவன் ஆபிரகாமைச் சந்தித்து ஆசீர்வதித்தான்.
2
ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான். மெல்கிசேதேக்கினுடைய முதற்பெயரின் பொருள், “நீதியின் அரசன்” எனப்படுகிறது. அத்துடன், “சாலேமின் அரசன்” என்றால், “சமாதானத்தின் அரசன்” என்ற அர்த்தமும் இருக்கிறது.
3
தந்தையோ, தாயோ, வம்சவரலாறோ மெல்கிசேதேக்கிற்கு இல்லை. வாழ்நாட்களின் தொடக்கமோ, முடிவோ இல்லாத இவன், இறைவனுடைய மகனைப்போல், என்றென்றும் ஒரு ஆசாரியனாய் நிலைத்திருக்கிறான்.
4
மெல்கிசேதேக்கு எவ்வளவு பெரியவனாயிருந்தான் என்று யோசித்துப் பாருங்கள்: நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம்கூட தான் போர்க்களத்தில் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவனுக்குக் கொடுத்தானே.
5
லேவியின் தலைமுறையினர்களில் ஆசாரியர்களாகிறவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளும்படி, மோசேயின் சட்டம் வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளும், லேவியர்களின் சகோதரர்களாயிருந்தும், இப்படிக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
6
ஆனால், இந்த மெல்கிசேதேக்கோ லேவியின் சந்ததிகள் அல்ல. அப்படியிருந்தும், ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டு, இறைவனிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த ஆபிரகாமை இவன் ஆசீர்வதித்தான்.
Settings