எபிரெயர் 10:1-14
1
மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது.
2
அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே!
3
ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன.
4
ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது.
5
இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;
6
தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.
7
புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’ ”
8
முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன.
9
பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார்.
10
இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
11
ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான்.
12
ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார்.
13
அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
14
ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
Settings