ஆதியாகமம் 32:13-21
13
அன்றிரவு அவன் அங்கேயே தங்கினான்; பின் தன்னிடம் உள்ளவற்றிலிருந்து தன் சகோதரன் ஏசாவுக்கு அன்பளிப்பாக,
14
இருநூறு வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறியாட்டுக் கடாக்கள்,
15
முப்பது பெண் ஒட்டகங்களுடன் அதன் குட்டிகள், நாற்பது பசுக்கள், பத்து காளைகள், இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்தான்.
16
அவன் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியே தன் வேலைக்காரரிடம் ஒப்படைத்து, “மந்தைகளுக்கு இடையில் சிறிது இடம்விட்டு, எனக்கு முன்னே போங்கள்” என்றான்.
17
அவன் முன்னே செல்பவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “என் சகோதரன் ஏசா உன்னைச் சந்தித்து, ‘நீ யாருக்குச் சொந்தமானவன்? எங்கே போகிறாய்? உனக்கு முன்னே போகும் இந்த மிருகங்களுக்குச் சொந்தக்காரன் யார்?’ என்று கேட்டால்,
18
‘இவை உமது பணியாளன் யாக்கோபுக்குச் சொந்தமானவை; இவற்றைத் தன் ஆண்டவன் ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார், அவரும் எங்கள் பின்னே வருகிறார்’ என்று சொல்” என்றான்.
19
“ஏசாவைச் சந்திக்கும்போது இதேவிதமாகவே சொல்லவேண்டும்” என்று இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மந்தைகளைப் பின்தொடர்ந்து சென்ற மற்றவர்களுக்கும் அவன் அறிவுறுத்தினான்.
20
“ ‘உமது பணியாளனாகிய யாக்கோபும் எங்கள் பின்னால் வருகிறான்’ என்பதைத் தவறாமல் சொல்லுங்கள்” என்றான். பின்பு, “எனக்கு முன்னால் நான் அனுப்பும் இந்த அன்பளிப்புகளால் நான் அவனைச் சமாதானப்படுத்துவேன்; பிறகு, நான் அவனைக் காணும்போது ஒருவேளை அவன் என்னை ஏற்றுக்கொள்வான்” என நினைத்தான்.
21
அப்படியே யாக்கோபின் அன்பளிப்புகள் அவனுக்கு முன்னே கொண்டுபோகப்பட்டன; அவனோ அன்றிரவு கூடாரத்திலேயே தங்கினான்.
Settings